தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12 மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கியிருக்கும் முதன்மை வேட்பாளரான நேசராசா சங்கீதன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் இன்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருடைய உறவினர் மற்றும் ஆதரவாளரால் வீடு தேடிவருவோம், கொத்துவம் என தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருடைய வாகனம் இன்றையதினம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டதாகவும் அதனை குறித்த சுயேட்சை வேட்பாளர், பொலிஸாரிடம் கெஞ்சியே விடுவிக்கப்பட்டதாக மக்களிடம் கூறுவதாக கூறியே குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.