முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்துசபை சாலை ஊழியர்கள் நேற்றையதினம் மாலை தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றையதினம் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ. ச பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள், இ.போ.ச. சாரதி மீதும் பேருந்து நடத்துனர் மீதும் தாக்குதல்கள் நடத்தினர் இதில் நடத்துனர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார் .
இவ்வாறான நிலையில் உரிய நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தப்படாமையே தங்களது இந்த முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எனவே தமக்கான உரிய நேரங்களை வழங்கி மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இந்த கால வரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் தனியார் பேருந்து குழுவினரால் தாக்கப்பட்ட எமது காப்பாளருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், நேர அட்டவணை பங்கீட்டு நியதிசட்டத்தின் அடிப்படையில் 60: 40 என்ற விகிதத்தில் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொழில் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய சாலைகளில் இருந்து முல்லைத்தீவிற்கான போக்குவரத்து சேவை இன்று இடம் பெறாது என வடமாகாண தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சாலை பிரதான நுழைவாயில் கதவில் மக்களுக்கு சேவை செய்வது என்ன பிழையா? நேரம் என்ன எங்களுக்கு தடையா? , முல்லைத்தீவு- கொக்கிளாய் 36 KM. இ.போ.சபை கட்டணம் 203 ரூபாய் தனியார் கட்டணம் 250 ரூபாய், வீதி போக்குவரத்து அனுமதிப்பத்தரமின்றி சேவையாற்றும் முல்லைத்தீவு தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் போன்ற சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் தமக்கான நிரந்தர தீர்வாக 60:40 சேவை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்காமல் தங்களது போராட்டம் நிறுத்தப்படமாட்டாது எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.