தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார்.
இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“வளமான நாடு, வளமான வாழ்க்கை” என்ற அரச கொள்கையின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகினாறது. அந்தவகையில் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் விசுவமடு பகுதியில் 24 நபர்களுக்கு காணி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய காணிகளை வழங்கும் காணிக்கச்சேரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 100 நபர்களுக்கு காணி வழங்கும் காணிக்கச்சேரி எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. இது மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் புதிய காணி வழங்கலில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதேசத்தில் காணி இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்செய்கைக்கான காணி இல்லாதவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதிகளவு காணிகளை பிடித்தவர்களை வெளியேற்றி உண்மையில் காணி தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், பிரதேசத்தில் வேலையின்மையை குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று வகையான விசேட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலாவது குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக விசேட தொழில் வலயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேராவில் பகுதியில் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு, அவர்களின் முதலீட்டளவிற்கு ஏற்ப ஒரே இடத்தில் காணிகள் வழங்கப்படும். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளதாகவும், அருகில் உணவகம் மற்றும் தேராவில் குளம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரண்டாவது பாரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவோருக்காக ஏ35 வீதிக்கு அண்மித்த மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு சந்திக்கு அருகிலுள்ள ஒட்டுசுட்டான் வீதி பகுதி, தேராவில்லுக்கு அண்மித்த பகுதி மற்றும் கோம்பாவில் பகுதி ஆகிய இடங்களில் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுந்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்கப்படும்.
மூன்றாவது, பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 50 லீற்றருக்கு மேற்பட்ட பாலை உற்பத்தி செய்பவர்களுக்கு, கால்நடை வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் புல்வளர்ப்பதற்காக இரண்டு ஏக்கர் வரை காணி வழங்கப்படும். அதிக உற்பத்தி செய்பவர்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் காணிகளும் வழங்கப்படும் எனவும் கூறினார். தற்போது ஐந்து பேருக்கு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேராவில் பகுதியில் உள்ள அரச பண்ணையில் காணப்படும் மாமரங்களை பயன்படுத்தி தொழில் முயற்சிகள் மேற்கொள்ள முன்வருமாறு தொழில் முனைவோர்களிடம் அவர் அழைப்பு விடுத்தார்.
புதுக்குடியிருப்பில் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், பாரியளவிலான காணிகளை விவசாயப் பண்ணைகளுக்காக வழங்காமல், பல்துறை தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே தொழில்முனைவோர் புதுக்குடியிருப்பிற்கு வந்து முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறும், காணி இல்லாதவர்கள் விண்ணப்பித்து அரச கொள்கைக்கேற்ப பயன்பெறுமாறும் பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டார்.

