வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களை வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றையதினம் 2024.11.6 சந்தித்திருந்தனர். கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்ச பட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள் தொடர்பாக சங்கத்தினர் ஆளுனருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

முக்கியமாக விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் இன்மையும் அது தொடர்பான பொருத்தமான பொறிமுறை இன்மை தொடர்பாகவும் வாகன பற்றாக்குறை மற்றும் சாரதிகள் இன்மை தொடர்பாகவும் கால்நடை வைத்தியர்களின் இடமாற்ற சபையில் சங்கத்தின் உறுதியான பிரசன்னத்தின் அவசியம் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கும் தீவணங்களின் தரத்தின் உறுதிப்பாடு தொடர்பாகவும் ஆளுனருக்கு தெரிவிக்கப் பட்டிருந்தது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும் கால்நடை வைத்தியர்களும் மாகாணம் முழுதும் நடைமுறைப்படுத்தும் சேவைகள் தொடர்பாகவும் சட்டவிரோத சிகிச்சையாளர்களினால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆளுனருக்கு தெரியப்படுத்தப்ட்டது.

மேலும் கால்நடை வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் பற்றாக்குறையாக உள்ள ஏனைய ஊழியர்களின் தேவைப்பாடு தொடர்பாகவும் விளங்கப்படுத்தப்பட்டதுடன் வினைத்திறனான கால்நடை வைத்திய சேவையை வழங்குவதன் மூலம் பண்ணையாளர்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சாதகமாக பதிலளித்த ஆளுனர் வேதநாயகன் அவர்கள் உடனடியாக செய்யக் கூடியவற்றை செய்வதாகவும் ஏனையவற்றை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க முனைவதாகவும் உறுதியளித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் வடக்குமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் Dr.M.முரளிதாஸ், செயலாளர் Dr.S.சுகிர்தன், உபதலைவர் Dr.S.கிருபானந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news