இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது.
“நேசக்கரம் நீட்டிடுவோம் ஒன்றாய் இணைந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் (14.12.2024) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை சிறார்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
சமாதான புறா பறக்கவிடப்பட்டதனை தொடர்ந்து, மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகிய இம்மாபெரும் நத்தார் விழாவானது இலங்கை மிஸ்பா ஜெப மிஷனரி சபையின் தலைமைப் போதகரும், ஸ்தாபகருமான ஜெயம் சாரங்கபாணி அவர்களின் தலைமையிலும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் பங்களிப்பிலும் ஆரம்பமாகியிருந்தது.
நத்தார் நிகழ்வில் சிறார்களின் நடன நிகழ்வு இடம்பெற்றிருந்தது டன், இன,மத,மொழி பேதமின்றி 400 ற்கு மேற்பட்ட சிறார்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இலங்கை மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்துவிற்கு பிரதம விருந்தினர் சாய் முரளியால் சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் இந்திய தூதரகத்தின் கான்சல் ஜெனரல் சாய் முரளி , சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து, இராணுவ அதிகாரி, அருட்தந்தை, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.