இலங்கையின் கராத்தே தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்றையதினம் (25.05.2025) ஆண்டு நிறைவு விழா மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
தற்காப்பு கலையினை இளைஞர்கள் மத்தியில் ஊக்கிவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலங்கை கராத்தே தோ கூட்டமைப்பின் கீழ் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட கராத்தே தோ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 09 தற்காப்பு கலை பயிற்சி நிலையங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தற்காப்பு கலையின் செயல் விளக்கத்தினை செய்து காண்பித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்திய அட்சகர் பி.பரணிதரன், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி எஸ். சத்தியரூபன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் மற்றும் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அதிபர் ஐ.நெவில் ஜீவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் எஸ்.கிருசாந்தன், மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் ஆர்.சகிதரசீலன், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.வரதன் , கி.கஜகோகுலன் கிராம உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கதலைவர் , பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கறுப்புப்பட்டி நிலையினை உடைய சிறந்த பயிற்சி ஆசான்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களின் செயல் விளக்கம் இடம்பெற்று பயிற்சிகளை மேற்கொண்ட 400 வரையான மாணவர்களுக்கும் விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.