அழிவடைந்து செல்லும் கலை கலாசாரத்தை மேம்படுத்துகின்றோம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு அழிவடைந்து வருவதனால் அதனை மெருகூட்டி கலைக்கும் கலாசாரத்திற்கும் புத்துயிர் பெறும் நோக்கில் காத்தவராயன் கூத்து புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு தொடர்பில் இன்றையதினம் (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்து மயான புனரமைப்போடு ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரவையானது தொடர்ந்து கொவிட் காலத்தில் நிவாரணங்கள் வழங்கியதோடு நலிவடைந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை மேற்கொண்டு வந்திருந்ததனை அறிந்திருந்திருப்பீர்கள்.

முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு, வறியவர்களுக்கு நிவாரணம், நலிவடைந்த மக்களின் சிறுகைத்தொழில் முயற்சிக்கு கடனுதவி வழங்கி மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இளைஞர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வுகள்,இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கல்விசார் நடவடிக்கைகள் பாடசாலையுடன் இணைந்து மேற்கொள்ளும் அதேவேளை பல அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு அழிவடைந்து வருவதனால் அதனை மெருகூட்டுவதற்காக வருடாவருடம் கலை பண்பாட்டு விழாவினை நடாத்த வேண்டும் என எமது திட்டத்தில் வரைந்துள்ளோம். கடந்த வருடம் புதுக்குடியிருப்பு பிரதேச கலை பண்பாட்டு பெருவிழா இடம்பெற்றிருந்தது. இவ்வருடம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரோடு இணைந்து புதுக்குடியிருப்பு பேரவை இந்த மேம்பாட்டு பண்பாட்டு விழாவை நடாத்த இருக்கின்றது.

அந்தவகையில் பண்பாட்டு பெருவிழாவில் புரையோடியிருக்கும் காத்தவராயன் கூத்தினை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இதில் எம்பிரதேசத்தில் நாட்டுக்கூத்து கலைஞர்களாக உள்ள பலர் பங்குகொள்ள இருக்கின்றார்கள். எதிர்வரும் 12 ம் திகதி பொன்விழா மண்டபத்தில் காத்தவராயன் கூத்து நடைபெற இருக்கின்றது. அவ்அவிழாவில் அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுவதுடன், கலை பண்பாட்டு நிகழ்சியை அவர்களுக்கு. தெரியப்படுத்தும் நோக்கில் கிராமிய நடனம், ஆக்க இசையினை போட்டியாக நடாத்த தீர்மானித்திருக்கின்றோம். போட்டியில் முதல் இடங்களை பெறுபவர்களுக்கு 18ம் திகதி நடைபெறவுள்ள பண்பாட்டு பெருவிழாவில் பரிசில்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.எனவே அனைத்து மக்களினையும் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Latest news

Related news