கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பணச் சந்தை (கறுப்புச் சந்தை) ஊடாக டொலரின் விலையை செயற்கையாக உயர்த்த பல கறுப்புச் சந்தை வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் ஆராய்ந்த போது தினமும் மத்திய வங்கி டொலருக்கு நிர்ணயித்த பெறுமதியை விட சுமார் 15 ரூபாயை அதிகமாக செலுத்தி டொலர்கள் வைத்திருப்பவர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதாக தெரியவந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் டொலர்களை வைத்திருப்பவர்களிடம் அதிக விலை கொடுத்து டொலர்களை கொள்வனவு செய்யும் கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கொழும்பு – கோட்டையில் உள்ள நிதி வியாபாரிகள்
ஒரு டொலருக்கு மத்திய வங்கி நிர்ணயித்த கொள்முதல் விலையை விட 15 ரூபாய் அதிகமாக கொடுத்து வெளியில் டொலர்களை வாங்கும் இந்த மோசடி வணிகர்கள் அந்த டொலரை மேலும் 15 ரூபாய் உயர்த்திய பிறகு மீண்டும் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
உதாரணமாக, இந்த நிலைமை அவதானித்த தினத்தன்று, மத்திய வங்கி நிர்ணயித்த கொள்முதல் விலை ஒரு டொலருக்கு 305 ரூபாயாக இருந்தது. ஆனால் கறுப்புச் சந்தை வணிகர்கள் டொலரை 320 ரூபாய்க்கு வாங்கி 335 ரூபாய்க்கு விற்றதாக கொழும்பு கோட்டையில் உள்ள நிதி வியாபாரிகள் ஊடாக தெரியவந்துள்ளது.
உடனடி நடவடிக்கை
சில புகழ்பெற்ற நிதி நிறுவனங்களும் டொலரின் மத்திய வங்கி மதிப்பை விட அதிக விலைக்கு வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொலரின் உண்மையான பெறுமதியை பொய்யாக அதிகரித்து அதிக இலாபம் ஈட்டும் சில மோசடியான வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி நிறுவன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.