முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து இயந்திரம் அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுவது வதந்தியே. உறுதிப்படுத்திய செல்வம் எம்பி

முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருக்கும் Endoskopie இயந்திரத்தினை அனுராதபுர வைத்தியசாலைக்கு காெண்டு செல்ல அனுராதபுர வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவ்விடயம் சம்பந்தமாக தெளிவினை பெற்று கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வீ.சண்முகராஜாவை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அனுராதபுர வைத்தியசாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுதடைந்ததனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இயந்திரத்தினை முல்லைத்தீவிலிருந்து அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையிலையே அதனை அறியும் விதமாக குறித்த சந்திப்பு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருக்கின்ற இயந்திரம் ஒன்றினை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மை தன்மையினை அறியும் விதமாக நானும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் விஜிந்தனும் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அதற்கு பொறுப்பான வைத்திய அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

அவ்வாறான கோரிக்கை கடிதங்களோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ கிடைக்கவில்லை. அவ்வாறு வருகின்ற போது அதனை நாங்கள் மீள வழங்க முடியாது எனவும் எடுத்து கூறினார்கள்.

அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுவது வதந்தியாகவே பரப்பப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவ்வாறான விடயம் இடம்பெறவில்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

 

ஆகவே யாரும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலையில் வசதிகள் குறைவாக இருந்தாலும் அனைவரும் சிறப்பாக வேலை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.

தென்னிலங்கைக்கு உபகரணங்கள் கொண்டு போகின்ற சந்தர்ப்பங்கள் வருமாக இருந்தால் நிச்சயம் அதனைத் தடுத்து நிறுத்துவோம். தற்போது வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்ற நிலையிலே குறைந்தளவு வைத்தியர்களுடன் வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றது. மக்களும் சென்று பயன்பெற்று வருகின்ற சூழ்நிலையிலே இவ்வாறான இயந்திரங்களை கொண்டு செல்வதாக இருந்தால் அனுமதிக்க முடியாது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற வகையில் முக்கிய கவனம் செலுத்துவோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news