நீதிமன்ற உத்தரவை மீறி தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின்15 மோட்டார் சைக்கிளும், 2 மீனவர்களும் பொலிஸாரால் கைது (Video)

தண்ணிமுறிப்பு குளத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த  இரண்டு மீனவர்கள் ஒட்டிசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பலர் தப்பிச் சென்ற நிலையில் அவர்கள் வருகை தந்த 15 மோட்டார் சைக்கிளும் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு  தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடி சங்கத்தினருக்கும், கிச்சிராபுரம் நன்னீர் மீன்பிடி சங்கத்தினருக்கும் மாத்திரமே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வருகைதரும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக    தண்ணிமுறிப்பு குளத்தில் எந்தவித அனுமதியுமின்றி அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் தமிழ்  மீனவர்களுக்கும் பெரும்பான்மையித்தை சேர்ந்த மீனவர்களுக்கும் தொடர்ச்சியாக முரண்பாடு தோன்றி வருகின்றது.
இவ்வாறு தண்ணிமுறிப்பு குளத்தில் கடந்த (05.08.2023) அன்று அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மையின மீனவர்கள் 38  பேரையும் அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் சிறைப்படுத்திய குறித்த குளத்திற்கு உரித்தான மீனவர்கள்  ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடி சங்கத்தினை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கு என அழைக்கப்பட்ட நிலையில் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சமாதான சீர்குலைவு என்ற அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் தமிழ் மீனவர்கள் 17 பேர் மற்றும் பெரும்பான்மையின மீனவர்கள் 38 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இறுதியாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அனுமதி இல்லாத பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மீனவர்கள் இனிமேல் குறித்த குளத்திற்கு மீன்பிடிப்பதற்கு வரமாட்டோம் என தெரிவித்ததன் அடிப்படையில் நீதிமன்றில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

இந்த சூழலிலேயே குறித்த குளத்தில் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் தொடர்ச்சியாக பெரும்பான்மையின மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த விடயங்களை நேரில் உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களை குறித்த பகுதிக்கு அழைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் (02.11.2023) குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்டபோது அங்கு சுமார் 50 க்கு மேற்ப்பட்ட பெரும்பாண்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கத்திற்கும், ஒட்டுசுட்டான் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் சுமார் இரண்டு மணித்தியாலங்களில் அவ்விடத்திற்கு வருகைதந்த போது அங்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு மீனவர்களை  கைது செய்ததோடு ஏனையவர்கள் தப்பித்து சென்ற நிலையில் அவர்களுடைய 15  மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெலிஓயா மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக பல தடவைகள் அரச திணைக்களத்தினர், மற்றும் மீன்பிடி அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கும் எடுத்துரைத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே அத்துமீறி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குறித்த பகுதி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடி நடவடிக்கையில் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை அவ்வப்போது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news