அரசமானிய நிகழ்ச்சி திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு கலாவதியான அரிசி பொதி நேற்றையதினம் வழங்கப்பட்டதனையடுத்து இன்றையதினம் புதிய யுக்தி முறையை பின்பற்றி அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.
அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் 2024.03.25 என காலாவதி திகதி அச்சிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும் பழுதடைந்த நிலையிலையே இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டாம்நாள் இன்றையதினமும் அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கும் போது குறித்த சம்மத கடிதத்தில் அரச மானிய அரிசி வழங்கல் தொடர்பாக நான் சுய நினைவுடன், சுயவிருப்புடன் கண்ணால் பார்த்து, சுவைத்து, பாவனைக்கு உகந்த அரிசி என உறுதி செய்து எனது சம்மதத்துடன் பெற்றுக்கொள்கின்றேன் .மேலும் குறித்த அரிசி தொடர்பாக எவ்வித முறைப்பாடோ, சட்ட நடவடிக்கையோ நான் , எனது குடும்ப உறுப்பினரோ மேற்கொள்ளமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம் என எழுதப்பட்டு அதன் பின்னரே அரிசி வழங்கப்படுகின்றது. அத்தோடு வழங்கப்படும் அரிசி பொதி பையில் உள்ள காலாவதி திகதி 2024.08.05 என மாற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகளிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, நேற்றையதினம் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் சில காலாவதியானதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது. அதனையடுத்து நேற்றையதினம் அரிசி வழங்கப்பட்டவர்களின் தரவுகளை இன்றையதினம் பெற்று மீண்டும் அவர்களுக்கு தரமான அரிசி பொதிகள் வழங்கப்படும் எனவும் கடிதத்தை பெற்று அரிசி பொதிகள் வழங்க வேண்டும் என்றில்லை. அரிசி வழங்கலினை நிறுத்துமாறு கூறியிருக்கின்றேன். அரிசியினை பார்த்து சிலர் தங்களுக்கு தருமாறு கேட்டதனால் உத்தியோகத்தர்கள் கடிதத்தில் கையொப்பத்தினை வாங்கி அரிசி பொதியினை வழங்கியிருப்பார்கள் என மேலும் தெரிவித்தார்.