முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் ECDO நிறுவனத்தினால் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது

இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருந்தனர்.

இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் தமிழின படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாளான இன்றையதினம் (16) முல்லைத்தீவு சிலாவத்தை சந்தி மற்றும் உண்ணாபிலவு ஆகிய இடங்களில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

Latest news

Related news