தமிழர் தேசத்தின் இருப்பிற்காக திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும். கா.திருமகன்

தமிழர் தேசத்தின் இருப்பிற்காக தமிழர்கள் திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார்.

மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலானது கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது. சிங்கள மக்கள் பிரதான இரு கட்சிகளையும் புறந்தள்ளி ஊழல் என்ற சிங்கள தேசத்தில் காணப்படும் பிரச்சினையை மையப்படுத்தி வாக்களித்திருந்தனர். எனினும் அதனைச் சற்று அவதானித்தால் கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் தேசிய பாதுகாப்பு என்ற கோசத்துடன் கோட்டாபாய வென்ற16 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அனுர வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கள தேசியவாதம் ஊழல் எதிர்ப்பு என்ற வெளிப் போர்வையுடன் பலமடைந்து வருகின்ற சூழலில் அதன் உண்மை நிலையை உணராத சில வடகிழக்குத் தமிழர்கள் குறிப்பாக எமது சில தாயக இளைஞர்கள் ஊழல் எதிர்ப்பு என்ற மாய மானின் வலைக்குள் வீழ்ந்துள்ளனர். இதன் மூலம் தமிழர் தேசிய அரசியலும், தமிழர்களின் இருப்பும் கேள்விக்குறியாகி வருகின்றது.

நாம் என்றும் ஊழல் மோசடிகளுக்கும், தமிழின விரோத செயற்பாட்டிற்கும் எதிரானவர்கள். எமது தமிழ் தேசிய அரசியலிலும் பொருத்தமற்றவர்கள் இருக்கின்றனர். அவர்களை தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி ஓரங்கட்டுவது வராலாற்றுக் கடமை. அதற்காக வீட்டை உடைக்க முயல்வது பொருத்தமற்றது.

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை என்ற தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் எனது பணிகள் அமையும் என தமிழர் தேசத்தின் மீது ஆணையாக உறுதி கூறுகின்றேன்.

தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கும் எந்த எண்ணமும் தெற்கு ஆட்சியாளர்களிடம் இல்லை. அதற்கு அனுரவும் விதிவிலக்கானவர் அல்ல. இதனாலேயே நாம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

தாயகத் தமிழர்கள் திரட்சியாக தங்களின் தேசத்தின் இருப்பையும், தங்களது அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிலை நிறுத்துவதற்கு அதிகூடிய விருப்புவாக்கில் என்னை உங்களின் பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என உரிமையுடன் கேட்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Latest news

Related news