நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். இது எதிர்வரும் 24.11.2024 அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் 25.11.2024 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும். இது 26.11.2024 அன்று புயலாக ( மிதமான வலுக்கொண்ட புயலாக) மாற்றமடையும்.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இது கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை மிகச் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்வரும் 26.11.2024 க்கு பின்னரே கணிக்கலாம். தற்போதைய நிலையின் படி இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுச்சேரி – கடலூருக்கு அண்மித்ததாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் எதிர்வரும் 25ம் திகதி இரவு அல்லது 26ம் திகதி கிழக்கு கடற்பகுதி க்கு(அம்பாறைக்கு அண்மித்து) பின்னர் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மிதமான வலுவுள்ள புயலாக கருதப்பட்டாலும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 24.11.2024 முதல் தீவிரமடையும். குறிப்பாக எதிர்வரும் 25.11.2024 முதல் 28.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரையான 48 மணி நேரத்தில் 350 மி.மீ. இனை விட உயர்வான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
25.11.2024 முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். 26,27 மற்றும் 28ம் திகதிகளில் காற்றின் வேகம் கடற்பகுதிகளில் 70 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரை வீசக் கூடும். உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம். மேற் குறிப்பிட்ட கடற் பகுதிகளில் பல நாட் கலங்களில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரை திரும்புவது அவசியம்.
பொதுவாக சாதாரண சந்தர்ப்பங்களில் அதிக கனமழை கிடைத்தாலும் அது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் புயல் போன்ற அசாதாரண வானிலை நிலைமைகளில் கிடைக்கும் கன மழை வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில்;
1. கரையோரப் பகுதிகளில் புயல் காற்று காரணமாக உயர்வான அலைகளின் விளைவால் நிலப்பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும்.
2. புயலின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நிலப் பகுதிகளில் கிடைக்கும் மழை நீர் வடிந்து கடலை சென்றடையாது.
3. வேகமான காற்றோடு கூடிய மழை என்பதனால் மழையின் பாதிப்பு உயர்வாக இருக்கும்.
4. நிலம் ஏலவே நிரம்பியுள்ளமையால் மேலதிகமாக கிடைக்கும் ஒவ்வொரு 10. மி.மீ. உம் நிலத்தின் மேலேயே தேங்கி நிற்கும்.
மேற் குறிப்பிட்ட காரணிகள் காரணமாக எதிர்வு கூறப்பட்டுள்ள புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளன.
அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே…..
இந்த புயல் தொடர்பான முன்னறிவிப்பினை சாதரணமாக கருத வேண்டாம்.
இந்த நிமிடம் வரை சகல மாதிரிகளும்(கிட்டத்தட்ட 19 மாதிரிகள்) இந்த புயல் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழை வீழ்ச்சியையும், வேகமான காற்றையும், அதீத கடற் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றே வெளிப்படுத்துகின்றன.
ஆகவே ஒரு புயலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். ஒரு அனர்த்தத்துக்காக எம்மை தயார்ப்படுத்தி அந்த அனர்த்தம் நிகழாது விட்டால், அதனால் எமக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஆனால் நாம் தயாராக இல்லாமல் அனர்த்தம் ஒன்று நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் மோசமானதாக இருக்கும். ஆகவே எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வோம்.
வடக்கு ,கிழக்கு தென் மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல் அவசியம்.
எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக உயரம் கொண்ட கடலலைகள் காரணமாக கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உள்வருகை தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மற்றும் காலி மாவட்ட கரையோர மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
கனமழை காரணமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என்ற விடயத்தை அனைத்து மக்களுக்கும் அறிவித்தல் வேண்டும். குறிப்பாக 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக விழிப்போடு இருத்தல் அவசியம்.
மிக வேகமான காற்றினால் பாதிக்கக்கூடிய மரங்கள், கட்டிடங்கள் என்பன போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.
23.11.2024 அதிகாலை 1.00 மணிக்குவெளியிடப்பட்டது
-நாகமுத்து பிரதீபராஜா-