முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய வெளிநாட்டுகப்பலில் இருந்த மக்களை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்றையதினம் (19.12.2024) காலை மியன்மாரில் இருந்து கப்பல் ஒன்று கரையொதுங்கியிருந்தது. குறித்த கப்பலில் 35 சிறுவர்கள், ஒரு கற்பிணி பெண் உட்பட்ட 102 பேர் இருந்துள்ளனர்.
மியன்மாரில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு எந்த நாட்டிலாவது தஞ்சங்கோருவதற்கு குறித்த மக்கள் கப்பலில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய காலநிலை காரணமாக காற்று இழுவை அதிகமாக இருந்ததனால் கப்பல் இலங்கையை நோக்கி தள்ளப்பட்டதன் காரணமாகவே குறித்த கப்பல் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த கப்பலில் இருப்பவர்கள் பத்து நாட்களாக கப்பலில் இருந்ததனால் உணவுகள் எதுவும் இன்றி அவதிப்பட்டுள்ளனர், சிலர் மயக்கமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த விடயம் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து உலருணவு பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்ட நிலையிலும் , கப்பலை கரைக்கு கொண்டுவரமுடியாத நிலையில் கடற்படையினரின் கப்பல் உதவியுடன் குறித்த வெளிநாட்டு கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.