வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் வீடுவந்து சேராத நிலையில் அவர்களது தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குமுழமுனை,நித்தகை குளம், ஆண்டான்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில்
சிக்கிய விவசாயிகளை அளம்பில் அன்னை வேளாங்கன்னி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம், மயூரன், அருள்ராஜ் படகின் உதவியுடன் குமுழமுனை மக்கள், இளைஞர்கள் இணைந்து ஊடகவியலாளர் பா.சதீஸ் உதவியுடன் சென்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நடவடிக்கையில் ஒரு சிறுவன் உட்பட ஏழு விவசாயிகள் காப்பாற்றப்பட்டு மீட்டெடுக்கப்பட்டனர்.
ஆண்டு தோறும் இப்பகுதியில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு வருவதனால் இந்த உயிர்காப்பு நடவடிக்கைக்காக இஞ்சின் படகு ஒன்றும், பாதுகாப்பு கவசங்கள் அரசினால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என மீட்பு பணியின் பின்னர் குமுழமுனை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


