முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுசமூக இன்றையதினம் (22.12.2025) திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இடம்பெற்று புதிய தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் பதவி விலகியதனை அடுத்து தவிசாளர் பதவி வெற்றிடம் காணப்பட்டது. அந்த வெற்றிடத்தினை நிவர்த்தி செய்ய வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்றையதினம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றிருந்தது.

குறித்த தெரிவு கூட்டத்தில் மூவர் தவிசாளர் பதவிக்காக தமிழரசு கட்சியினை சேர்ந்த மிக்கேற்பிள்ளை ஜோன்சன் மோகனராஜா, ஜனநாயக தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர் தொம்மைப்புள்ளை பபுல்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகிய மூவரும் போட்டியிட்டு இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளை பெற்று புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்
இது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா கூறும்போது,

அதிக வாக்குகளைபெற்று ஆளும் கட்சி தவிசாளர் பதவியினை கைப்பற்றியுள்ளது. காரணம் தமிழரசு கட்சி தமக்குரிய சுயநலத்தை தேடிக்கொண்டு குறிப்பிட்ட சிலர்தான் கட்சியை ஆழ்கின்றார்கள்.இன்று இத் தமிழ் மண்ணை இழந்ததற்கு காரணம் தமிழரசுகட்சி. இவர்கள் வீட்டுக்குள் இருந்து அரசியல் நடாத்திக்கொண்டு, உல்லாச படகுகளை ஓட்டிக்கொண்டு இன்று இம்மண்ணை இழக்க செய்திருக்கின்றார்கள் என தெரிவித்திருந்தார்
இது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கும் போது,

கரைதுறைப்பற்று தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சி இந்த சபையை இழந்திருக்கின்றது. காரணம் தமிழசுகட்சியின் தலமைகள் முல்லைத்தீவில் இருக்கும் ஒரு நபரின் கதையினை கேட்டு செயற்பட்டதனால் இன்று இந்த சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சென்றிருக்கின்றது. தேசியம் கதைத்துக்கொண்டு தமிழரசு கட்சியில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கும் ஒருசிலரை தலமைகள் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் தேசியபரப்பில் பயணிக்கும் தமிழ் தேசியகட்சிகளுடன் இணைந்து சபையினை கைப்பற்றுவதாக கூறியிருந்தார்கள். இன்று தமிழரசு கட்சிக்கு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபையில் நல்லதொரு பாடம் கிடைத்திருக்கின்றது.என தெரிவித்திருந்தார்.

