முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களும் வழங்கிக் கௌரவித்தார். அத்தோடு நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி மணிவண்ணன் உமாமகள் கலந்து சிறப்பித்தார்.
குமுழமுனை கிராமத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற ”குமுழமுனை சுப்பர் லீக் போட்டியில் ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன.அவையாவன அரியாத்தை அணி, குருந்தூர் அணி, நித்தகை அணி, மணலாறு அணி, பண்டாரவன்னியன் அணி முதலிய அணிகளாகும்.
இதில் பண்டாரவன்னியன் மற்றும் மணலாறு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி மோதியிருந்தன. இறுதிப் போட்டியில் பண்டாரவன்னியன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்ததை கைப்பற்றியது.
இந்த சுற்றுப்போட்டி சிறப்பான முறையில் இடம்பெற குமுழமுனை வாழ் புலம்பெயர்ந்த உறவுகள் முதன்மையான பங்கினை வழங்கியிருந்தார்கள்.
பண்டாரவன்னியன் அணியினை சுவிஸ் நாட்டில் வசிக்கும் சாந்தகுமார் கலைச்செல்வி நிதி அனுசரணை வழங்கி தன்னை அணியின் உரிமையாளராக நிலை நிறுத்தினார்.
மணலாறு அணியினை நோர்வே நாட்டில் வசிக்கு இராசையா உதயகுமார் நிதி அனுசரணை வழங்கி தன்னை அணியின் உரிமையாளராக நிலை நிறுத்தினார்.
அரியாத்தை அணியினை ஜேர்மன் நாட்டில் வசிக்கும் கனகையா ஸ்ரீகாந்தன் நிதி அனுசரணை வழங்கி தன்னை அணியின் உரிமையாளராக நிலை நிறுத்தினார்.
நித்தகை அணியினை குமுழமுனை வாழ் சிரேஸ்ட பொறியியலாளர் தில்லையம்பலம் கெங்காரதன் நிதி அனுசரணை வழங்கி தன்னை அணியின் உரிமையாளராக நிலை நிறுத்தினார்.
குருந்தூர் அணியினை கனடாவில் வசிக்கும் தங்கராசா உருத்திரமூர்த்தி நிதி அனுசரணை வழங்கி தன்னை அணியின் உரிமையாளராக நிலை நிறுத்தினார்.
இந்த இறுதிப்போட்டி நிகழ்வில் கரைதுறைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயந்தன், முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் சதீஸ்கரன், குமுழமுனை மத்தி கிராம அலுவலகர் சுஜினோ, ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் , உதைபந்தாட்ட விளையாட்டுக் குழு உறுப்பினர்கள், ஊர்வாழ் உறவுகள் , அயல்கிராம மக்கள் , பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற பல வழிகளிலும் உதவி புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை ஐக்கிய விளையாட்டுக் கழகம் தெரிவித்து கொள்கின்றது.