திருமண உறவில் ‘துரோகம்’ என்றால் என்ன?

உறவில் ‘ஏமாற்றுதல்’ என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் பல வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம் என்று கருதுகிறார்கள்.

அதேவேளை அதிகம் வெளிப்படையான உறவுகளைக் கொண்ட பல தம்பதிகள் பெரும்பாலும் உடல்சார்ந்த துரோகமாக எதைக் கருத வேண்டும், எதைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்பதற்கான தெளிவான விதிகளைக் கொண்டுள்ளனர்.

உடல்சார் துரோகம் வரையறுக்க எளிதானது என்றாலும் உணர்ச்சிசார் துரோகம் ஒரு கண்ணிவெடியைப் போன்றது. இந்தச் சொற்றொடர் நன்கு அறியப்பட்டிருந்தாலும் உணர்ச்சி ரீதியாக துரோகம் என்றால் என்ன என்பதைப் பற்றி மக்களிடையே வெவ்வேறு கருத்துகள் உள்ளன. உங்களை ஈர்க்கக்கூடிய சக ஊழியருடன் தேநீர் அருந்துவதா? உங்கள் துணை அச்சுறுத்தலாகக் கருதும் ஒருவருடன் அடிக்கடி குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்வதா? அல்லது ஓர் அந்நியரின் சமூக ஊடக பக்கத்தில் குலவுகின்ற வகையிலான கருத்துகளைப் பதிவிடுவதா?

உணர்ச்சிசார் துரோகத்தின் வெவ்வேறு வரையறைகளோடு அதைக் கையாள்வது தம்பதிகளுக்கு ஒரு சவாலாக இருக்கலாம். மேலும் இத்தகைய எதிர்பார்ப்புகளில் பொருந்தாமல் இருப்பது உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும். ஆனால், எப்போதும் இது இப்படியே இருப்பதில்லை. உணர்ச்சிசார் நம்பகத்தன்மை என்ற கருத்தே ஒப்பீட்டளவில் புதிது. அடிப்படைத் தேவைகளுக்கு அப்பால், ஓர் உறவில் எதிர்பார்ப்புகளை வடிவமைத்த சமூக மாற்றங்களின் விளைவாக இது வந்தது.

இன்று, மக்கள் பொதுவாக தம்பதியின் கூட்டாண்மை என்பது பிரத்யேகமாகப் பகிரப்பட்ட உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தைக் குறிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். மேலும் டிஜிட்டல் யுகம் நாம் தொடர்புகொள்வதற்கான பல வழிகளை உருவாக்குவதால், உறவுக்கு வெளியே எந்தெந்த தொடர்புகள் உறவுக்கு ஆபத்தான வகையில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகிவிட்டது.

நவீன கருத்து

பரந்த அளவில், உணர்ச்சிசார் துரோகம் என்பது ஓர் உறவிலுள்ள ஒரு நபர் தனது துணையைத் தவிர வேறு ஒருவருடன் முக்கியமான உணர்ச்சிரீதியான தொடர்பை வளர்த்துக் கொள்ளும் சூழ்நிலையை விவரிக்கிறது. அது உடல்ரீதியான நெருக்கமாக மாறாமலேயே உறவுக்குரிய அந்தக் கோட்டைக் கடக்கிறது. சில வகையான நெருக்கங்கள் குறிப்பிடத்தக்க ஒருவருடன் மட்டுமே பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். மேலும் மூன்றாம் தரப்பினரிடம் உணர்ச்சிபூர்வமாக நடந்துகொள்வதன் மூலம், ஒரு நபர் தனது உறவையும் அதிலுள்ள பிரத்யேகமான உணர்வுத் தொடர்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியும் என்ற கருத்தை இது அடிப்படையாகக் கொண்டது.

உடல்ரீதியான துரோகத்தைப் போலவே, உணர்ச்சிசார் துரோகமும் தம்பதிகளைப் பிரித்துவிடும்.

ஆனால், உணர்ச்சிசார் துரோகம் சில உறவுகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கலாம் என்ற எண்ணமே மிகவும் புதியது. சமூக பாத்திரங்கள், குடும்பம் மற்றும் உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள விட்மேன் கல்லூரியின் சமூகவியல் பேராசிரியரான மைக்கேல் ஜேனிங்கின் கூற்றுப்படி, ஒருவர் உணர்வுசார் துரோகம் செய்யமுடியும் என்பது ஒப்பீட்டளவில் நவீன கருத்து என்கிறார்.

நீண்டகால உறவின் இன்றைய கட்டமைப்பில், “இரு நபர்களுக்கிடையில் வாழ்நாள் முழுவதும் அவர்களை இணைத்து வைத்திருக்கும் பசையாக உணர்ச்சிரீதியிலான தொடர்பு” இருப்பது சமீபத்திய மாற்றங்களின் விளைவு என்று ஜேனிங் நம்புகிறார். வரலாற்று ரீதியாக, தம்பதியில் ஒருவர் தனது துணையின் உணர்ச்சிசார் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை என்று ஜேனிங் சுட்டிக்காட்டுகிறார். திருமணம் பெரும்பாலும் பொருளாதார பாதுகாப்பு, நிலவியல், குடும்ப உறவுகள், இனப்பெருக்க இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது; காதலால் ஏற்படாத திருமணங்களில், மக்கள் வேறு இடங்களில் தங்கள் உணர்ச்சிபூர்வமான தேவைகளில் நிறைவைக் காணலாம் என்று புரிந்துகொள்ளப்பட்டது.

ஆனால், கடந்த 200 ஆண்டுகளில் உறவுகளைப் பற்றிய நமது புரிதல் மாறிவிட்டது. வளர்ந்த நாடுகளில் காதல் போட்டிகள் வழக்கமாகிவிட்டன. கடந்த நூற்றாண்டில் தனித்துவத்தின் எழுச்சியால், மக்கள் சுய பாதுகாப்பு மற்றும் சுய-நிறைவுக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இன்று, மக்கள் தங்கள் துணையின் உணர்ச்சிசார் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள். அதாவது மூன்றாம் தரப்பினரின் உணர்ச்சிசார் தேவைகளை நிறைவேற்றுவது, தனது துணைக்குச் செய்யும் ஒரு துரோகமாகப் பார்க்கப்படலாம். உடல்ரீதியாக உண்மையாக இருப்பது மட்டுமே ஓர் உறவுக்கு இனி போதாது. இப்போது, பல தம்பதிகள் மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிசார் நல்வாழ்வின் சில அம்சங்களுக்காக மூன்றாம் தரப்பினரிடம் செல்வதை ஒரு வகையான துரோகம் என்று கருதுகிறார்கள்.

டிஜிட்டல் யுகத்தில் உணர்ச்சிசார் துரோகத்தை வரையறுத்தல்

தொழில்நுட்பம் நம் வாழ்வில் புகுத்தப்படுவதற்கு முன்பு, உணர்ச்சிசார் துரோகம் என்பது சக ஊழியருடன் தகாத முறையில் நெருங்கிய நட்பைப் பெறுவது, தம்பதியில் ஒருவர் தனது துணையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய தனிப்பட்டதாகக் கருதப்படும் உணர்வுகள் அல்லது எண்ணங்களை மற்றொருவருடன் பகிர்ந்துகொள்வதைக் குறிக்கலாம். இது இணையருக்குத் தெரியாமல் முன்னாள் காதலியை அல்லது முன்னாள் இணையரைச் சந்திப்பதையும் குறிக்கலாம். அல்லது தங்கள் அன்புக்குரியவர் ஒரு திறந்த புத்தகமாக தன்னிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இணையரிடமிருந்து தனது வாழ்க்கையின் சில அம்சங்களை மறைப்பதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் டிஜிட்டல் புரட்சியானது மக்களை இணைக்க இன்னும் பல வழிகளை வழங்கியுள்ளது, சந்திப்பு அல்லது தொடர்பு இல்லாமல் இருப்பதற்கு இடையிலான கோட்டை மங்கலாக்குகிறது. மேலும், விதிகள் மீறப்படுவதில்லை என்ற எண்ணத்தோடு, மற்றவர்களுடன் அநாமதேயமாக தொடர்புகொள்வதற்கான அதிக வழிகளை விளங்குகிறது.

பொதுவாக சமூக ஊடகங்கள் நாம் மற்றவர்களைச் சந்திக்கும், அவர்களுடன் பழகும் விதத்தை மாற்றிவிட்டன” என்கிறார் அமெரிக்காவின் அட்லான்டாவிலுள்ள பெர்மன் சைக்கோதெரபியில் மனநல ஆரோக்கியம் மற்றும் நடத்தை குறித்த நிபுணரான அமிரா ஜான்சன். திறன்பேசிகள் மற்றும் சமூக ஊடக தளங்களின் மூலம், மற்றொரு நபரின் படத்தை லைக் செய்வது, கருத்து தெரிவிப்பது, பழைய காதலரைத் தொடர்புகொள்வது அல்லது அந்நியர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவது போன்று உணர்ச்சிசார் துரோகத்திற்கு வழிவகுக்கும் நடத்தைகளில் ஈடுபடுவது எளிதானது.

நிச்சயமாக, அனுமதிக்கப்பட்டவை மற்றும் அனுமதிக்கப்படாதவை குறித்து மக்கள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நபரின் சமூக ஊடக பதிவை லைக் செய்வதை துரோகம் என்று சிலர் கருதினாலும் மற்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கலாம். சில உறவுகளில் ஆழ்ந்த தனிப்பட்ட உரையாடல்கள் தம்பதியிடையே இருக்க வேண்டும் என்ற பொதுவான புரிதல் உள்ளது. மற்றவர்களைப் பொறுத்தவரை, உணர்ச்சிரீதியாக நெருக்கமான நட்புகள் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று என்ற கருத்து உள்ளது. குறுஞ்செய்தி மூலம் ஒருவருடன் குலைந்து பேசுவது சில தம்பதிகளுக்கு பாதிப்பில்லாததாக இருக்கலாம். அதுவே மற்றவர்களுக்கு உறவை முறிக்கக்கூடிய வகையிலும் அமையலாம்.

ஒவ்வோர் இணையரும் ஏமாற்றுவது என்றால் என்ன என்பதைப் பற்றிய தனிப்பட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். இது மற்றவர்களுடன் தொடர்புகளை உருவாக்குவது முதல் மற்றொரு நபருடன் நேரத்தைச் செலவிடுவது வரை, அந்த உறவு முற்றிலும் உடல் நெருக்கத்தோடு தொடர்பில்லாத உணர்வுரீதியாக நெருக்கமான பிணைப்புகொண்ட உறவாக இருந்தாலும் கூட, அதில் இருப்பவருடைய இணையர் அதைத் தம் உறவுக்கு அச்சுறுத்தலாக உணரக்கூடும்,” என்று டேட்டிங் செயலியான ஹிலியில் உறவு விஞ்ஞானியாக இருக்கும் மரிசா கோஹன் கூறுகிறார்.

உறவை முறித்துக் கொள்வதா? சிக்கலைச் சரிசெய்து தொடர்வதா?

பொதுவாக, உணர்ச்சிசார் துரோகத்தை விட பாலியல் துரோகத்தை மிகவும் வருத்தமளிக்ககூடியதாக மக்கள் நினைப்பதாக ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால், 1,660 பிரிட்டிஷ் மக்களிடம் 2015ஆம் ஆண்டு யூகோவ் நடத்திய ஆய்வில், பதிலளித்தவர்களில் 44% பேர் இணையராக இல்லாத ஒருவருடன் உடலியல் நெருக்கமல்லாத உணர்ச்சிசார் உறவை உருவாக்கிக் கொள்வதை துரோகம் செய்வதாகக் கருதுகின்றனர். இதற்கிடையில் பதிலளித்தவர்களில் 15% பேர் அவர்கள் ஓர் உறவில் இருக்கும்போது இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபட்டதாகக் கூறினர்.

ஜான்சனின் கூற்றுப்படி, உணர்ச்சிசார் துரோகத்தின் தெளிவற்ற தன்மையே அதன் பரவலுக்கு வழிவகுப்பது துல்லியமாகத் தெளிவாகிறது. உடல்சார் துரோகத்தைப் பொறுத்தவரை எப்போது எல்லை மீறப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஒரு நபர் தொடக்கத்தில் தங்களை நியாயப்படுத்தக்கூடிய நடத்தைகளுடன், உணர்ச்சிசார் துரோகம் மிகவும் படிப்படியாகத் தொடங்கலாம்.

“உணர்ச்சிசார் துரோகத்தைச் செய்யும் பெரும்பாலான மக்கள் வேண்டுமென்றே அதைச் செய்வதில்லை” என்கிறார் ஜான்சன். “ஒரு நபர் தனது துணை தன்னை மதிப்பதில்லை என்பதைப் போலவோ அல்லது தனக்காக நேரம் ஒதுக்குவதில்லை என்பதைப் போலவோ உணர்ந்தால், அவர்கள் அந்த உணர்வை வேறோர் இடத்தில் தேடுவார்கள். அவர்கள் நட்பைத் தேடலாம். அது அவர்களுக்கு ஆதரவை, உணர்ச்சிபூர்வமான பாசத்தைக் கொடுக்கிறது. இது தற்செயலாக உணர்வுரீதியாக நெருக்கமாக்குகிறது.

சில உணர்ச்சிகரமான விவகாரங்கள் உடல்சார் துரோகத்திற்கான பாதையில் முதல்படியாக இருக்கலாம். மற்றவர்களுக்கு உறவுக்கு வெளியே இத்தகைய நட்புறவுகளை உருவாக்குவது ஆதரவு, நெருக்கம் மற்றும் உணர்ச்சிசார் தொடர்பைக் கண்டறிய ஒரு வழியாக இருக்கலாம். உறவுக்கு வெளியே நட்பு மற்றும் ஆதரவு அமைப்புகள் இருப்பது நம் நல்வாழ்வை மேம்படுத்தக்கூடிய நேர்மறையான விஷயம் தான். நம் துணைக்கு அதனால் மகிழ்ச்சியின்றி இருப்பார் என்ற எண்ணம் ஏற்படும் வகையிலான நட்பை உருவாக்கும்போது தான் பிரச்னை வருகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உணர்ச்சிசார் துரோகம் தம்பதிகளுக்கு இடையிலான தொலைவினால் வருகிறது. யாராவது ஏற்கெனவே உறவில் மகிழ்ச்சியற்றவராக இருந்தால் அல்லது வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களை விரும்பத் தொடங்கியதால், அவர்கள் தங்கள் இலக்குகள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய ஒருவரோடு தொடர்புகொள்ளத் தொடங்கலாம். ஆரம்பத்தில் தீங்கற்றதாக இருக்கும் தொடர்புகள் பிறகு காலப்போக்கில் உணர்ச்சிகரமான விவகாரமாக மாறலாம்.

இந்த மாதிரியான நிகழ்வை எதிர்கொள்வதற்கான தம்பதிகளின் திறன்கள், அவர்களால் இதுகுறித்துப் பேசிக்கொள்ள முடிவது, எல்லைகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஜேனிங் நம்புகிறார். “அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதற்கும் துரோகம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்வதற்குமான மக்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார்.

பாரம்பரியம் அல்லாத உறவுமுறைகள், ஒருமித்த ஒருதார மணமில்லாதது போன்ற விஷயங்களில் சிலர் மிகவும் திறந்த மனதுடன் இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், நீங்கள் அதை ஒரு தம்பதிகளின் உறவிலுள்ள எல்லைகளை எப்படி வரையறுக்கிறோம் என்றாலும், அதில் எல்லையை மீறி துரோகம் செய்வது அந்த உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது.

“தம்பதிகள் இன்னும் தெளிவு மற்றும் அளவுருக்களை விரும்புகிறார்கள். ஆனால், முன்பைப் போல் இல்லாமல், இதைத் தாங்களே தீர்மானிக்க விரும்புகிறார்கள்,” என்கிறார் ஜேனிங்

Latest news

Related news