வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : குடும்ப பெண் எரித்துக்கொலை வீடும் எரிப்பு – 10 நபர்கள் காயம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 10 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுளைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத்தாக்குதலை முன்னெடுத்தது.

இதனையடுத்து காயமடைந்த நபர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்ப பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியநிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். அவரது கணவர்,சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்கள் அடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மற்றும் தடவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக இனம் தெரியாத நபர்கள் நடமாடித்திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அங்கு வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்று அதிகாலை பிறந்த நாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

Latest news

Related news