இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில் இன்றைய தினம் (02.08.2023) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான நடைபவனி ஆரம்பமாகியிருந்தது.
குறித்த ஆதரவுப் பயணத்தில் “மன்னார் முதல் மாத்தளை வரை” இருப்பை உறுதிப்படுத்துவோம் தோழமையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.
குறித்த நடைபயணத்தில் மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு, மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊழியர்கள் மற்றும் A C G இளைஞர் அணியினர், வர்த்தக சங்கத்தினர், விழுது நிறுவன ஊழியர்கள், அமரா, சமாசம், யுகசக்தி மகளீர் சம்மேளன அங்கத்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆதரவை வழங்கும் விதமாக தாய்த்தமிழ் பேரவையினால் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.