கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியில் 17 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு. தீடீரென இடை நிறுத்தப்பட்ட அகழ்வுபணி

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒன்பது நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 17 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, கிராம சேவையாளர், தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வாய்வில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இன்றுடன் மொத்தமாக 17 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்படுகின்றது.

அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ராஜ்சோமதேவ குழுவினர் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு செல்ல இருப்பதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news