தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டித் தொடரில் ரெட்பானா நியூபாரதி அணி வெற்றிவாகை சூடியது.
தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக, தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் கடந்த 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டித் தொடரின் இறுதிப்போட்டி 24.09.2023 அன்று, மூங்கிலாறு தேராவில் புதியநிலா விளையாட்டுக்கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக இடப்பெற்றது.
குறிப்பாக தேராவில் புதியநிலா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரை மூன்று மாவீரர்களின் தாயார் ஜோசேப் முணியம்மா ஏற்றிவைக்க, மலர்வணக்கத்தை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களின் சகோதரர்கள் தாயக அரசியல்துறை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் மாணவர்கள், இறுதிப்போட்டிக்கு தெரிவான அணி வீரர்கள் என பலரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுகளைச் சுமந்த மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டில், ரெட்பானா நியூபாரதி மற்றும், விஸ்வமடு தொட்டியடி விக்கிணேஸ்வரா அணிகள் மோதின. இந் நிலையில் குறித்த இறுதிப்போட்டியில் ரெட்பானா நியூபாரதி அணி வெற்றிவாகை சூடியது.
போட்டிகளை தொடர்ந்து திலீபன் நானைவுக்கிண்ணத்தை சுவீகரித்த ரெட்பானா நியூபாரதி அணிக்கு 50,000ரூபா பணப்பரிசு தொகையும், எதிரணியான விஸ்வமடு தொட்டியடி விக்கிணேஸ்வரா அணிக்கு 30,000ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
அத்தோடு இந்த நினைவுக்கிண்ணத் தொடரில் மூன்றாவது இடத்தைப் பெற்ற தர்மபுரம் இளந்தாரகை அணிக்கு 15,000ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த நினைவுக் கிண்ணத் தொடரில் அதிகூடிய விக்கெட்களை வீழ்த்திய வீரராக உடையார்கட்டு நண்பர்கள் அணியின் வினுசன் தெரிவாகியதுடன், தொடரின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராகவும் தொடரின் நாயகனாகவும் நியூபாரதி அணியின் சுதன் அக்குத்தா தெரிவாகினார். இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.