தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு – சுதந்திரபுரத்திலும் செப்ரெம்பர் (26) இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் சுதந்திரபுரம், நிரோஷன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. அந்தவகையில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி பார்த்தீபன் மாலினி ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகதீபம் திலீபனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன்,மலர் அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இவற்றையடுத்து சங்கநாதம் புகழ் பேபி ஆசிரியர் மற்றும், நடனமயில் கணபதிப்பிள்ளை கருணாநந்தன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் திலீபனின் தியாகவுணர்வை வெளிப்படுத்தும் நடன நிகழ்வுகள், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்தோடு திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்கள் பரிசில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், நடன நெறியாளர்களும் இதன்போது பொன்னாடைபோர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.
அதேவேளை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இராணுவத்தினர் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், வேலு தியாகராசா, சாம்பசிவம் உதயகுமார், திருநாவுக்கரசு பிரணவன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.