நீதிபதி பதவி விலக குருந்தூர்மலை விவகாரமே. தொல்லியல் திணைக்களத்தினர் பொறுப்பு வகித்திருக்க வேண்டும். ஏனென்றால் கட்டளையை மீறி நடப்பதற்கு அவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்தார்.
பணிபகிஷ்கரிப்பு தொடர்பாக இன்றையதினம் (05.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பதவி விலகலானது முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கும் , சட்டத்தரணிகளுக்கும், ஏனையோருக்கும் ஒரு அதிர்ச்சியான தகவலாக ஏற்கனவே எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. உண்மையிலேயே நீதிபதியால் வழங்கப்பட்ட கட்டளைகள், தீர்ப்புகள் என்பவற்றிற்கு எதிராக மேன்முறையீடுகள் செய்வதற்கும், மீள் விண்ணப்பங்கள் செய்வதற்கும் சட்ட முறைமைகளும் சட்ட ஏற்பாடுகளும் இருக்கின்றது.
அதனை மீறி அந்த கட்டளைகளையோ, தீர்ப்புகளையோ மாற்றுமாறும் அந்தந்த நீதிபதிகளை வற்புறுத்துவதும், அழுத்தங்களை பிரயோகிப்பதும் அவர்களது சுயாதீனமான தன்மைக்கு இடையூறாக தனிப்பட்ட முறையிலே, விமர்சிப்பதும்போன்ற விடயங்கள், முற்றும் முழுதாக தவிர்க்கப்பட வேண்டியதாகும். இத்தகைய செயற்பாடுகள் ஏற்படுமாக இருந்தால் ஒழுங்கான நீதியை, நேர்மையான நீதியை, வழங்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். ஆகவே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஏற்பட்ட பாதிப்பானது நாட்டிலே நீதி இல்லை, நீதித்துறை சுதந்திரம் இல்லை. சட்டத்தின் ஆட்சி சரியாக கடைபிடிக்க என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இந்த விடயமானது ஏற்கனவே குருந்தூர் மலையிலே ஏற்பட்ட ஒரு பிணக்காகும். குருந்தூர் மலையிலே ஏற்கனவே ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அதாவது சிவலிங்கமும், ஐயனார் அடையாளமாக சூலமும் வைத்து வழிபாடுகள், பொங்கல், என்பவற்றை இந்துக்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள்.
அதேவேளை 2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தினரும் பௌத்த மதத்தினை சேர்ந்தவர்களும் வந்த போது இரு தரப்பிற்குமிடையே அமைதிக்கு பங்கமான சூழல் ஏற்பட்டிருந்தது. குறித்த பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டு அனைவரும் விசாரிக்கப்பட்டு ஒரு வழக்காக முல்லைத்தீவு நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அது தொடர்பாக ஆராய்ந்தபோது உண்மையிலேயே அங்கே இந்துக்கள் வழிபாடுகளை, ஏற்கனவே மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதும், தொல்லியல் திணைக்களத்தினர், தாங்கள் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விண்ணப்பம் முன்வைக்கப்பட்டு அதன் அடைப்படையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு மட்டு அனுமதிக்கப்பட்டார்கள் அதன்போது பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதாவது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் அப்பகுதி கிராம சேவையாளர், பல்கலைக்கழகங்களை சேர்ந்த வரலாற்று பேராசிரியர்கள் என்போரின் சமூகத்திலே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளபட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அகழ்வாராய்ச்சி என்று அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு கொண்டு இருந்த அதேவேளை பௌத்த விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆகவே அதனை அறிந்து கொண்ட இந்துமதத்தை சேர்ந்த நிர்வாகத்தினரும் அதற்குரிய ஆதரவாளர்களும் நீதிமன்றத்திலே ஒரு விண்ணப்பத்தை மேற்கொண்டதன் அடிப்படையில் மறுதரப்புக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டு அவர்களும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் அங்கே தோன்றி தொல்லியல் திணைக்களத்தினர் கள விஜயம் ஒன்றினை மேற்கொள்ள இரு தரப்பினரும் இணங்கியிருந்தார்கள்.
கள விஜயம் என்பது நீதிபதி அங்கே செல்கின்ற போது ஒரு அமர்வாகவே தான் கருதப்பட வேண்டும். அங்கே வாதி, பிரதிவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படுகின்ற சட்டத்தரணிகள்கள் மட்டுமே அங்கே வாதங்களையும், பிரதிவாதங்களையும், சமர்ப்பணங்களையும் செய்ய முடியுமே தவிர பொதுமக்களோ, வேறு அதிகாரிகளோ யாரும் அதனை செய்ய முடியாது. ஆனால் அதிலே உள்ள கட்சிக்காரர்களும் சட்டத்தரணிகளும் மட்டுமே இதிலே கலந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவர்கள் நீதிபதியுடன் கதைப்பதற்கும் , நீதிபதிக்கு சில விடயங்களை கூறுவதற்கும் எத்தணித்த போது அவ்வாறு அனுமதிக்க முடியாது. இங்கு வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது. இங்கே முக்கியமாக இந்த கள விஜயத்தை மேற்கொண்டதன் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தி அதனை முடித்துக் கொண்டு வந்து அதற்கான கட்டளைகளையும் வழங்கி இருந்தார்.
ஆகவே அதில் அதிருப்தியுற்ற சரத்வீரசேகர அவர்கள் தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி மாவட்ட நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் அதன் பின்னர் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து நீதிபதியை அவமானத்திற்கு உள்ளாக்கி அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவிற்கு அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு செயற்பட்டிருக்கிறார்.
அது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் இரு தடவைகள் பணிபகிஷ்கரிப்பை செய்திருந்தோம். அதன் மூலம் இவ்வாறான தலையீடுகள், இவ்வாறான நடவடிக்கைகள், குறையும் அல்லது அதை திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்த்திருந்தோம். அவ்வாறு எதுவும் இடம்பெறாமல் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த காரணத்தினால்தான் மாவட்ட நீதிபதி அவர்கள் பதவி விலக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அவரது கடிதத்திலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்று உயிர் அச்சுறுத்தல், இரண்டாவதாக தொடர்ச்சியான அழுத்துங்கள். ஆகவே அவை பிரயோகிக்கப்படாவிட்டால் அவர் நாட்டைவிட்டு செல்லவேண்டிய, அவசியம் இருந்திருக்காது. ஆனால் தற்போது பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தாலும் கூறப்படுகின்ற விடயம் என்னவென்றால் அவர் ஒரு நீதிபதி அவ்வாறாயின் பிடியாணை விட்டிருக்கலாம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்று. அதற்கெல்லாம் அவகாசம் கொடுத்ததாகவும் இல்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் இல்லை.
ஆனால் அவர்கள் விமர்சனங்களையும், அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் பிரயோகித்தே வந்திருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான சூழ்நிலையிலே இந்த குறிப்பிட்ட விடயமானது குருந்தூர் மலை விவகாரத்தில் இருந்து எழுந்த ஒன்று என்பதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஆரம்ப நிலையிலே வெறுமனே இருந்த கல்லுகளும், மலையும், மணல்களுமாக இருந்த இடம் தற்போது ஒரு விகாரை ஒன்றை கட்டி வழிபடுகின்ற பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஆகவே அங்கு கட்டளை மீறப்பட்டிருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது .
நீதித்துறை அமைச்சருடைய கூற்றுக்களும் நீதிபதி அவர்களுடைய பிரச்சனை அவரே அதனை தீர்த்திருக்க வேண்டும். அதற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்ற விதமாக கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் நீதி சேவை ஆணைக்குழுதான் அதனை செய்ய வேண்டும் என்று.
ஆகவே எவ்வாறு இருந்தாலும் இங்கே ஒரு நீதிபதி பதவி விலகி செல்கிறார் என்றால் அது இந்த மொத்த நாட்டுக்கே ஒரு அவமானமான விடயமும், எல்லோருமே தத்தமது கடமைகளை உணர்ந்து செயற்படுத்த வேண்டிய விடயமாக இருக்கின்றது.
ஆகவே இதற்கு முக்கியமாக தொல்லியல் திணைக்களத்தினர் பொறுப்பு வகிக்க வேண்டும். ஏனென்றால் கட்டளையை மீறி நடப்பதற்கு அவர்கள் அனுசரணையாக இருந்திருக்கிறார்கள். அதேவேளை அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் அடிப்படையிலே இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்று (05.10.2023) மாவட்ட சட்டத்தரணிகள் நான்காவது நாளாக தமது பணி புறக்கணிப்பை மேற்கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட இருக்கின்றது. வருகின்ற திங்கட்கிழமை அதாவது (09.10.2023) அன்றையதினம் கொழும்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையிலே இலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள சட்டத்தரணிகளும் இணைந்து ஒரு பணிப்பகிஸ்கரிப்பையும் எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள இருக்கின்றோம்.
அதன் போது அவர்களால் ஏதாவது தீர்வுகள் எட்டப்படக்கூடிய வாய்ப்புகள், முயற்சிகள், முனைப்புகள் இருக்குமாக இருந்தால் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பணிபகிஷ்கரிப்பு தொடர்பாக சில தீர்மானங்களை எடுப்போம் என்பதோடு, அல்லது பல்வேறு வடிவங்களில் பணிபகிஷ்கரிப்பு இடம்பெற்று கொண்டே இருக்கும். நீதிபதி அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை, நியாயம் கிடைக்கும்வரை, நீதி கிடைக்கும் வரை இந்த நாட்டிலே நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகளின் சுயாதீனத்தன்மையும் பேணப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்படுகின்ற போதுதான் இந்த புறக்கணிப்பு நடவடிக்கையானது முற்றுப்பெறும் என்பதை என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன் என மேலும் தெரிவித்தார்.