முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்பு திணைக்களங்களுடனான சந்திப்பு.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்பு திணைக்களங்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (14.10.2023) காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கிராமிய இராஜாங்க அமைச்சர் மஸ்தான்,

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.விகிதரன் , கமநல சேவைகள் நிலைய உதவி பணிப்பாளர் பரணிதரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி ஜாமினி சுசீல்டன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது அழிவடைந்த பயிற்செய்கைக்கான காப்புறுதி காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த கால உழுந்து, பயறு செய்கை தொடர்பாகவும், கடந்த கால மற்றும் எதிர்கால நெற் பயிர்ச் செய்கை, பயிற்செய்கையின் போது யானையின் தாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளது கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை, குரங்குகளது அச்சுறுத்தல் இருப்பதாக விவசாயிகள், விவசாய அமைச்சிடம் முன்வைத்திருந்தனர். இதன் போது அமைச்சர் இதற்காகவே நான் சீனாவுக்கு குரங்களை அனுப்புவதற்கு முயற்சி செய்த போது சுற்றாடல் அதிகார சபையால் வழக்கு தொடுக்கப்பட்டதனால் இடைநடுவில் விடப்பட்டதாக அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Latest news

Related news