வீதியோட்ட நிகழ்வுடன் ஆரம்பமான குமுழமுனை மகாவித்தியாலய இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டி (Photos)

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முதல்வர் வீரசிங்கம் அவர்களின் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாகொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான அனுசரணையில் மகேஸ்வரன் குமுதன் அவர்களின் ஒழுங்குபடுத்தல்களுடன் நேற்றுமுன்தினம் வீதியோட்ட நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆண்களுக்கான வீதியோட்டமானது மூன்றாம் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமாகியதுடன் அதனை பி.ஜி.கே.டிலான்( உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்)அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அத்துடன் பெண்களுக்கான நிகழ்வானது அளம்பில் முருகன் கோயில் முன்பாக ஆரம்பமாகியதுடன் அதனையும் ஆசிரிய ஆலோசகரே ஆரம்பித்து வைக்க போட்டிகள் இனிதே ஆரம்பமாகின.

ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை உதயரதன் துளசிகன் , இரண்டாமிடத்தினை ஜெயக்குமார் கிசாளன், மூன்றாமிடத்தினை கிருபாகரன் பிரவீனும் பெற்றுக்கொள்ள ,

பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை யூட்நிரூபன் தேனுயா, இரண்டாமிடத்தினை அற்புதராஜா வினோதா, மூன்றாமிடத்தினை வியஜகுமார் புகழினியும் தங்கள் வசப்படுத்தி வெற்றி பெற்றுகொண்டார்கள்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பெறுமதி மிக்க வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவமளிக்கப்பட்டதுடன் ஏனைய போட்டியினை நிறைவு செய்த அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பணப்பரிசும் வழங்கி கௌரவமளிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், அனுசரணையாளரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Latest news

Related news