வறட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை’ வெளியிட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (09.03) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணைகள் நிலுவையிலுள்ள போதிலும் நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் உள்ள வெடுக்குநாறி மலையில் தொல்பொருள் நிலையப் பிரதேசத்தினுள் சிவராத்திரி பூஜையை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
மேலும், தொல்பொருள் பிரதேசத்தில் உள்ள இந்து ஆலய பூசகர் உள்ளிட்ட குழுவினர்களினால் வவுனியா நீதவான நீதிமன்றத்தில் இலக்கம் டீ 540/23 இன் கீழ் மனுதாக்கல் செய்யப்பட்டு அனுமதி கோரப்பட்ட போதிலும், அவ்வாறான விஷேட பூஜைகள் நடாத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என நீதிமன்றம் கடந்த 2024 மார்ச் 04 ஆம் திகதியன்று தீர்ப்பு வழங்கியது.
மேலும், தொல்லியல் பிரதேசத்தில் பகல் நேரத்தில் சாதாரணமாக நடாத்தப்படும் வழிபாட்டு பூஜைகளுக்கு மேலதிகமாக விஷேட பூஜைகள் நடாத்துவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 2024 மார்ச் 06ஆம் திகதி தொல்பொருள் பதில் பணிப்பாளரினால் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் நேற்று (08) சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொல்லியல் பிரதேசத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
எவ்வாறாயினும், தொல்லியல் பிரதேசத்தில் மஹா சிவராத்தரி தினத்தன்று 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து சாதாரணமாக பூஜை வழிபாடுகள் செய்தனர்.
இரவு நேரத்தில் தொல்லியல் பிரதேசத்தில் பூசகர்கள் மற்றும் 40 பேரை கொண்ட குழுக்களால் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தொல்பொருள் இணைக்களம் அல்லது வனப் பாதுகாப்பு இணைக்களத்தின் அனுமதியின்றி நேற்று (08) இரவு நேரத்தில் யாகம் செய்து விஷேட சிவராத்திரி பூஜைகள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவ்வாறு செய்ய வேண்டாம் என தெரிவித்தபோதிலும் அவர்கள் அதனையும் மீறி தொடர்ந்து செயற்பட்டதுடன், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வனப் பிரதேசத்தினுள் யாக பூஜைகள் நடாத்துவதன ஊடாக வனப் பிரதேசத்தில் தீ ஏற்பட்டு, அழிவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால் வனப் பிரதேசத்தில் அத்துமீறி பிரவேசித்தமை மற்றும் சட்ட முரணற்ற வகையில் ஒன்று கூடிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனும் குற்றத்தின் கீழ் பிரதான பூசகருடன் 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நெடுங்கேணி, புளியங்குளம், கனகராயன்குளம், மாமடுவை ஆகிய பிரதேசத்தில் வசிக்கும் 24, 29, 30, 34, 37 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.