தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர்
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்
இந்நிலையில் நேற்று (25.03.2024) கேப்பாபுலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினர் இதன்போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர்
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரைதீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் ,ஆலயங்கள் , தேவாலயம்,பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன
குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன குறிப்பாக 62 பெயரின் 171 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக நேற்றைய தினம் மக்கள் அரசாங்க அதிபரை சந்தித்துவிட்டு வந்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய வேளையில் அங்கு வந்த இராணுவத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் இராணுவ சீருடையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார்