சிவசேனையின் வரவால் வெடுக்காநாறியில் பொதுக்கட்டமைப்பு அமைக்கும் செயற்பாடு ஒத்திவைப்பு.

சிவசேனை அமைப்பு பங்கெடுத்தமையால் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் புதிய நிர்வாகத்தெரிவு மற்றும் பொதுக்கட்டமைப்பு உருவாக்கும் பணி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுக்கட்டமைப்பு ஒன்றை அமைப்பதுடன் புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவதற்கான பொதுக்கூட்டம் இன்றையதினம் (12.04.2024) இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டருந்தனர். இதன்போது சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான குழுவினரும் கூட்டமண்டபத்திற்கு வருகைதந்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இவர்கள் கூட்டத்தில் இருந்தால் நாங்கள் வெளியே செல்கின்றோம் என்று கூறியதுடன் அனைத்து மக்களும் எழுந்து வெளியில் சென்றனர். இதனால் மண்டபத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்ப்பட்டது.

பொதுமக்கள் வெளியில் சென்றபோதும் சச்சிதானந்தம் தலைமையிலான குழு அந்த மண்டபத்தை விட்டு வெளியில் வரவில்லை.

இந்நிலையில் குறித்த கூட்டத்தினை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பதாக நடப்பு நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து மக்களும் அந்தபகுதியில் இருந்து அகன்று சென்றனர். இதன்போது கூட்டம் இடம்பெற்ற இடத்தில் உள்ள மேசையில் சச்சிதானந்தம் படுத்துறங்கியதுடன், மக்கள் அனைவரும் சென்றபின்னரே அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

இதேவேளை வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அடாவடி சம்பவங்கள் தொடர்பில் சிவசேனை அமைப்பு இதுவரை மௌனம் காத்ததுடன், அதற்கு எதிராக பொதுமக்களால் நடாத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் இவர்கள் அண்மையில் குருந்தூர் மலைக்கு சென்று அங்குள்ள பௌத்தபிக்குகளுடன் உறவாடியிருந்தார். இதனால் அவர் மீது நம்பிக்கையற்ற நிலையிலேயே எதிர்ப்பினை வெளியிட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

Latest news

Related news