முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம் : விநியோகஸ்தர் மீது சட்ட நடவடிக்கை – அரசாங்க அதிபர்

தரமற்ற அரிசி விநியோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் நேற்றையதினம் (25.04.2014) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெற்றுவரும் நிலையில் சில இடங்களில் காலாவதியான பாவனைக்குதவாத அரிசி வழங்கப்படுவதாக குற்றசாட்டு கிடைக்கபெற்றுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட விநியோகம் தொடர்பாகவும் அதனை விநியோகித்த விநியோகத்தர் தொடர்பாகவும் முழுமையான தகவல்களை வழங்குமாறும் தரமற்ற அரிசி வழங்கப்பட்டிருப்பின் விநியோகத்தர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கிராம சேவகர் ஊடாக, பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இது தொடர்பாக தங்களது பூரண அவதானத்தை செலுத்தி திட்டத்தை வெற்றியடைய செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news