தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன் என காட்டுவதற்காகவே இந்த சதி முயற்சி என கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றையதினம் (14.06.2024) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் கடந்த மாதம் 23ஆம் திகதி தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், அதன் பின்னர் தன்னோடு தொடர்புபட்டு வெளிவந்த குரல்பதிவு தொடர்பாகவும் இதன்போது ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.
கடந்த மாதம் 23ஆம்திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்துச்சென்றார்.
இவ்வாறு அவருடைய வீட்டிற்குச் சென்றபோது அங்கு என்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக தண்ணீரூற்று பகுதி எரிபொருள் நிரப்பு நிலைய முகவராகவுள்ள வர்த்தகர், மற்றைய நபர் அரச படைகளுடன் கடந்த காலங்களில் சேர்ந்தியங்கிய ஒரு ஆயுதக்குழுவுடைய மத்தியகுழு உறுப்பினர், மற்றையவர் புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளவர் உள்ளிட்டவர்கள் என்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு பணத்தினை வழங்கி இந்தத் தாக்குதலை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
கடந்தமாதம் முதலாம்திகதி கிளிநொச்சியிலிருந்து 0773251390 என்ற தொலைபேசி இலக்கதிலிருந்து ஒரு நபர் அழைப்பினை மேற்கொண்டு, கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினருடைய பெயரைப் பயன்படுத்தி, தான் குறித்த பாராளுமன்ற உறுப்பினருடைய ஆதரவாளர் எனக் குறிப்பிட்டு என்னைக் கொலை செய்வேன் என மிரட்டியும், தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த 23ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகின்றேன்.
இந்த தாக்குதலுடன் இருவேறு தரப்புக்களுக்குத் தொடர்பிருக்கின்றது. ஒரு தரப்பு அரசியல் தரப்பு, மற்றையது முல்லைத்தீவு மாவட்டத்திலிருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிர்வாகத்தை முறையற்ற விதத்தில் தாம் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக முயற்சிசெய்கின்ற தரப்பு. இவ்வாறு இரண்டு தரப்புக்களுடைய கூட்டு முயற்சியில் தான் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில், தாக்குதலுடன் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் தற்போது சுதந்திரமாக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகின்றது. எனவே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிசார் மீது சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது. இருப்பினும் நீதிமன்றத்தை நம்புகின்றேன். பொலிசாரின் இத்தகைய அசமந்தப்போக்குத் தெடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமென நம்புகின்றேன்.
அதேவேளை என்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் எனது கைத்தொலைபேசியை கையகப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கைத்தொலைபேசியைக் கையகப்படுத்திவைத்து கொண்டு, என்னுடைய தொலைபேசியிலிருந்து வேறு நபர்களுடன் என்னை போன்று பேசி சில குரல் பதிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் அறிகின்றேன். நான் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன் எனக் காட்டுவதற்காகவே இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனது சகோதரன் விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்துள்ளார். எனது சகோதரி விடுதலைப்போரில் பங்கேற்று தடுப்பிற்குச் சென்று விடுதலையாகிவந்திருக்கின்றார்.
போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளின் மேடைகளிலேயே நான் முன்முதலாகப் பேச ஆரம்பித்தேன்.
தற்போது தேசியத்திற்கு எதிரானவன் என என்னைச் சித்தரிக்கின்றவர்கள் செய்யாத தியாகத்தை எனது குடும்பம் செய்திருக்கின்றது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது சரிபிழைகள் இருக்கலாம். ஆனால் அவர்களின் தியாகத்தை மிகவும் நேசிக்கின்றவன். ஆகவே இவ்வாறு போராட்டத்தைப்பற்றி தரக்குறைவாகப் பேசவேண்டிய தேவை எனக்குக் கிடையாது.