முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலையில் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரவிகரன் குற்றச்சாட்டு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்றையதினம் (17.06.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.

குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதுதவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news