முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார் , விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி தொடக்கம் மகியங்கனையிலிருந்து பாதயாத்திரை ஒன்றினை ஆரம்பித்த பிக்குகள் குழு ஒன்று இன்று (20.06.2014) முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து முல்லைத்தீவு குருந்தூர் மலையை செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக அளம்பில் சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன் வீதி தடுப்புக்கள் அப்பகுதியில் வைத்திருப்பதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
இந்த பாதுகாப்பு கடமைக்கு பொலிசாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியோர் பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த மக்கள் பௌத்த கொடியினை வீதியில் இரு பகுதிகளிலும் நாட்டி கூடாரங்களையும் அமைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.