உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை. எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மாவின் மனகுமுறல்(Video)

 

உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதுமில்லை எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும்வரை நாங்கள் ஓய போவதுமில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மா தனது மனகுமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தனது மன குமுறலை தெரிவித்திருந்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

எங்கள் குழந்தைகளை தேடி 15 வருடங்களாக தெருத்தெருவாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல், படுக்க இடமில்லாமல்

எத்தனை மாதமாக அடி வாங்கி, பேச்சு வாங்கி இதுவரையிலும் இந்த போராட்டத்தை கைவிடவில்லை. இனியும் எங்களுடைய உயிர் இருக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட போவதில்லை.

 

எங்களுக்கு மரண சான்றிதழோ, இரண்டு இலட்சமோ எதுவும் வேண்டாம். நான் இறந்தால், அடுத்தவை, அடுத்தவை என தொடர்ச்சியாக போராடிக் கொண்டே இருப்போம். கடைசி காலம் நாங்கள் மறையும் வரை எங்களுடைய பிள்ளைகளை பார்க்காமல் நாங்கள் ஓயமாட்டோம். புலனாய்வு பிரிவினர், பொலிஸார், இராணுவம் யார் அச்சுறுத்தினாலும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீருவோம்.

 

இதற்கான முடிவினை சர்வதேசம் கவனத்தில் எடுத்து எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் இறக்க முன் எங்களுடைய கண்ணுக்கு முன்னால் நாங்கள் பார்ப்பதற்கு நல்லதொரு முடிவு தர வேண்டும் என கேட்டு நிற்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news