புதுமாத்தளன் சாலை பகுதியில் நேற்றுமுன்தினம் புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல் தோண்டும் ஆயுதங்களும், ஜேசிபி இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (05.10.2024) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – புதுமாத்தளன் – சாலை கடற்கரை பகுதியில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் புதையல் தோண்டிய 4 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மாத்தளை, அனுராதபுரம், காலி, கண்டி போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 42, 45, 47 வயதுடையவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று (06) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.