தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது விவாதற்கு அழைப்பு விடுத்து சவால் விட்டுள்ளார் எமில்காந்தன்

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது முடிந்தால் அந்தக் கட்சி தலைவர்களை விவாதற்கு வரச் சொல்லுங்கள் என வன்னி மாவட்ட சுயேட்சை குழு 07 இன் முதன்மை வேட்ப்பாளர் எமில்காந்தன் சவால் விடுத்துள்ளார்.

 

வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்த போது புதிய மாற்றத்துக்கான தேர்தல் ஒன்று வந்ததால் உடனடியாக எமது கட்சி பதிவு செய்ய முடியாது போனது. அதனால் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றோம். நாங்கள் திடீரென தேர்தலுக்காக வந்த கட்சியும் இல்லை. சுயேட்சையும் அல்ல.

 

தமிழரசுக் கட்சியினுடைய மன்னார் மாவட்ட வேட்பாளர் டினேசன் அவர்கள் தனது அலுவலக திறப்பு விழா ஒன்றில் வைத்து ஒரு கருத்தை கூறியுள்ளார். சுயேட்சைக் குழுக்கள் எல்லாம் தேர்தல் காலத்தில முளைத்த தவளைகளாம். அது வாக்குகளை உடைத்து தமிழரரின் பிரதிநிதித்துவத்தை குறைக்குமாம். சுயேட்சைக் குழுக்களையும், அதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களையும் பற்றி பேசும் போது அவர் ஒரு விடயத்தை மறந்து விட்டார். தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழரசுக் கட்சியில் யார் தலைவர்? அந்த தலைவரை முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்தச் சொல்லுங்கள்.உடன் தலைவரை பகிரங்க விவாதற்கு வரச் சொல்லுங்கள்.

 

தமிழரசுக் கட்சி வேட்பாளர் டினேசன் அவர்களுக்கு பகிரங்க சவால் விடுகின்றோம். எமில்காந்தன் தலைமையிலான சுயேட்சைக் குழு 7 பகிரங்க விவாதற்கு வரச் சொல்லுங்கள். அவர்களது கட்சிக்கு ஒரு தலைவரையே அறிமுகப்படுத்த முடியாத கட்சியில் இருக்கும் ஒரு வேட்பாளர் எமது சுயேட்சையை பற்றி விமர்ச்சிக்கிறார். அந்தக் கட்சிக்கு தலைவர் அல்ல. அதனால் அது ஒரு கட்சிக் குழு. அந்த வேட்பாளருக்கும், அந்தக் கட்சிக் குழுவுக்கும் இந்த சவாலை விடுக்கின்றேன். முடிந்தால் ஒரு கிழமைக்குள் உங்கள் தலைவர் யார் என்பதை அறிவியுங்கள். தலைவரையே தெரிவு செய்யத் தெரியாத நீங்கள் எப்படி மக்களது இனப்பிரச்சனையை தீர்க்கப் போறீர்கள். அவர்களுக்கு என்ன நன்மையை செய்யப் போறீர்கள்.

 

அதேபோல், தாங்கள் மட்டும் தான் உரிமை அரசியலைப்பற்றி கதைக்கிறோம் ஏனைய அனைவரும் இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற பிரச்சாரத்துக்கு வலுச் சேர்ப்பவர்களாம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஒரு இனம் தன்னை நிலை நிறுத்தவேண்டும் என்றால் பொருளாதார அபிவிருத்தியையும் தன்னிறைவையும் கொண்டிருக்க வேண்டும். அது இருந்தால் அந்த இனம் உரிமையில் வெல்லமுடியும். இது இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டிய விடயம்.

 

கடந்த காலங்களில் உரிமை அரசியலை பற்றி பேசிய இவர்கள் எல்லாம் அதன் விளைவு பற்றியும் நடந்து முடிந்தது என்ன என்பது பற்றியும் பதிலளிக்க வேண்டும். எமது சுயேட்சை குழுவின் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களும் நடந்தால் உரிமை அரசியலை மக்கள் தானாகவே பெற்றுக்கொள்ளமுடியும்.

 

சிவசக்தி ஆனந்தனிடம் கேட்கிறேன். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் யார் என்று கூறுங்கள். இந்த சுயேட்சை குழுவிற்கு நான் தலைமை தாங்குகின்றேன். உங்களது தலைமை யார் என்று ஒரு கிழமைக்குள் அறிவியுங்கள். அவரை எம்முடன் பகிரங்க விவாதற்கு வரச் சொல்லுங்கள்.

 

தலைவரே இல்லாத நிலையில் மத்திய அரசாங்கத்துடனோ அல்லது வெளிநாடுகளுடனோ எப்படி பேச்சுவார்த்தை நடத்தப் போறீர்கள். 13 ஆ, 13 பிளஸ்சா, சமஸ்டியா என்று எப்படி கதைக்கப் போறீர்கள். யார் யார் போய் கதைக்கப் போறீர்கள். நாங்கள் மற்வர்களையோ, மற்றவர்களது கட்சி கொள்கைகளையோ விமர்சனம் செய்ய வரவில்லை.

 

ஆனால், எமது மக்கள் நொந்து போயுள்ளார்கள். கட்டையிடம்பனில் வாழுகின்ற மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விஸ்வமடு றெட்பானாவில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அதைப் பெற 4, 5 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் இவ்வளவு நாளும் ஒன்றாய் தானே இருந்தீர்கள். இதற்கு எல்லாம் என்ன தீர்வு கண்டீர்கள். மற்றவர்களை விமர்சிப்பதை விடுங்கள். மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதை தீருங்கள். வாக்கு அரசியலுக்காக மக்களை பிழையாக வழி நடத்தாதீர்கள்.

 

இனப்பிரச்சனை இருக்கிறது என்பது ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும். இனப்பிரச்சனை தொடர்பில் கூட்டம் போட்டால் எத்தனை மக்களுக்கு அந்தக் கூட்டத்திற்கு வர வசதி இருக்கு. இந்தக் கட்சிகளும், போராட்ட இயக்கங்களும் உருவாகும் போது மக்கள் பொருளாதாரத்தில் மீட்சி கண்டிருந்தார்கள். அதனால் உதவி செய்தார்கள். ஆகவே, இனப்பிரச்சனையை தீர்க்கவும், மக்களது அபிலாசைகளையும் தீர்க்க மக்களுக்கு பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும். தயது செய்து பிழையாக மக்களை வழி நடத்தாதீர்கள். முடிந்தால் மக்களுக்கு உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் மற்றவர்கள் செய்வதற்கு வழி விடுங்கள். வேலைப் பளுவில் உள்ள மக்களை குழப்பாதீர்கள் எனத் தெரிவித்தார்.

Latest news

Related news