நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் வட்டுவாகல் பாலம் மூழ்கியது; போக்குவரத்து இடர்பாடு குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு

கன மழை காரணமாக முல்லைத்தீவு – நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர்.

இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட்டுவாகல் பாலத்திற்கு நேரடியாகச் சென்று, வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள குறித்த சிக்கல் நிலைதொடர்பில் ஆராய்ந்தார்.

குறிப்பாக இவ்வாறு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உதவி மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தியதுடன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் இந்த போக்குவரத்துச் சிக்கல் நிலைகுறித்து பேசியிருந்தார்.

இந் நிலையில் மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் திணைக்கள அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகவும், அதன்பின்னர் நந்திக்கடல் முகத்துவாரம் வெட்டப்பட்டு நந்திக்கடல் ஆற்றுநீரை கடலில் விடுவதுடன் போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படுமென உதவி மாவட்டசெயலாளர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news