தற்போது சடுதியாக அதிகரித்துவரும் எலிகாய்ச்சல் நோயினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
வழங்கப்படும் குறித்த அறிவுறுத்தலில்
எலிக்காய்ச்சலால் உலகளாவிய ரீதியில் பத்து இலட்சம் பேர்வரை பாதிக்கப்படுகின்றார்கள். ஆண்டு தோறும் 60,000 உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் ஒரு பாரதூரமான நோயாகும்.
தற்போதைய பருவ மழையினை தொடர்ந்து எமது பகுதியிலும் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் சிலர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்துள்ளீர்கள். இந்நிலையில் எலிக்காய்ச்சல் அதாவது லெப்டோஸ்பைரோஸிஸ்
எனப்படும் நோய்தாெடர்பில் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியமாகின்றது.
இது லெப்ரோஸ்பைரா எனும் பக்றீரியாவால் ஏற்படுத்தப்படும் விலங்குகள் மூலம் பரப்பப்படும் கொடிய தொற்று நோயாகும். எலிகள், அகிளான் உட்பட கொறிப்பான்கள் மற்றும் கால்நடைகளின் சிறுநீருடன் வெளியேறும் பக்ரீரியா கிருமி தொற்றினால் இந் நோய் ஏற்படுகின்றது.
வயல் ,சேற்று நிலங்களில் விலங்குகளின் சிறுநீர் மூலம் தொற்றடைந்த தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்யும் விவசாயிகள் ,கால்நடைவளர்போர் எலிகாய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.தோலில் உள்ள காயங்கள், உராய்வுகள் கண் , மென்சவ்வுகள் மூலம் நேரடியாகவும், விலங்குகளின் சிறுநீர் மூலம் தொற்றடைந்த உணவுகள், குடிநீர் மூலமும் இவ் நோய்கிருமி மனிதருக்கு தொற்றுகின்றது.
அவசியமற்ற சந்தர்பங்களில் வயல் தண்ணீரில் , சேற்று நிலங்களில் நிற்பதை தவிர்க்கவும், வயல் நிலைகளை அண்டியுள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும், வீடுகள், வயல் நிலங்களில் எலிகள் தங்காதபடி கற்குவியல்கள், குப்பைகூழங்களை துப்பரவவு செய்யுங்கள், கொதித்தாறிய தண்ணீரை பருகவும், குடிநீர், உணவு பொருட்களுடன் எலிகள் தொடர்புபடும் சந்தர்பங்களுடன் அவவதானமாக இருங்கள்,
எலிக்காய்ச்சல் நோயானது கிருமி தொற்று ஏற்ப்பட்ட நாளில் இருந்து இரண்டு நாட்கள் தொடக்கம் இரண்டு மூன்று வாரங்கள் வரையான காலப்பகுதியில் நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தலாம். காய்ச்சல், தலையிடி, வயிற்றுநோ, தசை நோ, குமட்டல், வாந்தி , கண்சிவத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகள் டெங்கு போன்ற வேறு நோய்களுக்கும் பொதுவானவை என்பதனால் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியமானது.
வயல்,சேற்று நிலங்களில் வேலை செய்வது தொடர்பாக வைத்தியருக்கு தெரியப்படுத்துங்கள், எலிக்காய்ச்சலில் இருந்து முற்காப்பு செய்வதற்காக விவசாயிகளுக்கு பக்றீரியா மாத்திரைகள் தற்போது சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. உங்கள் பகுதிக்கான சுகாதார பணிமனை, சுகாதார பணியாளர்களை தொடர்புகொண்டு முற்பாதுகாப்பு மாத்திரைகள், ஆலோசனைகளை பெற்று கொள்ள முடியும். என பொது அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது.