முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, ஆழிப்பேரலை 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்தகாலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர்.

இவ்வாறு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2024 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமுகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் நடராசா தசரதராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news