முல்லைத்தீவு மாவட்டத்தில் 1291 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (05.05.2025) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது
இந்நிலையில், வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 1291 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 274 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் 87 ஆயிரத்து 800 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாளை (06.05.2025) காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.