புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் காத்தவராயன் நாட்டுக்கூத்து போட்டி இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கோடு பிரதேச பண்பாட்டுடன் தொடர்புடைய பழமை வாய்ந்ந நாட்டுக்கூத்தான காத்தவராயன் கூத்து போட்டியானது இன்றையதினம் (12.10.2025) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
முதலாம் இடத்தினை கொண்டலடி விநாயகர் கலாமன்றத்தினரும், இரண்டாம் இடத்தினை முத்தமிழ் கலாமன்றத்தினரும், மூன்றாம் இடத்தினை ஆதிபராசக்தி கலாமன்றத்தினரும், குரவில் கலாமன்றத்தினருமாக இரு அணிகளும் பெற்றுக்கொண்டிருந்தது.
கலைகளை அழிய விடாது குறித்த போட்டியில் பங்குபற்ற உதவிய 4 காத்தவராயன்கூத்திற்குரிய அண்ணாவிமார்களுக்கு இதன் போது கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த காத்தவராயன் கூத்து போட்டியில் முதல் இடம் பிடித்த அணியானது எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெருவிழாவில் மேடையை அலங்கரிக்க இருப்பதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு எதிர்வரும் 18ம் திகதி பிரதேச செயலகத்தினால் இடம்பெறவுள்ள பண்பாட்டு பெருவிழாவில் சான்றிதழ்களும் ,பெறுமதிமிக்க பண பரிசில்களும் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.
புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் மேம்பாட்டு பேரவையின் தலைவர் பொன்.பேரின்பநாயகம் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி டென்சியா கிரிதரன் அவர்களின் ஆசிஉரையுடன் ஆரம்பமான குறித்த போட்டியில் கலைஞர்கள், பொதுமக்கள், மேம்பாட்டு பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது இளைஞர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வுகள், இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கல்விசார் நடவடிக்கைகளை பாடசாலையுடன் சேர்ந்து செய்யும் அதேவேளை பல அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு அழிவடைந்து வரும் நிலையில் அதனை மெருகூட்டுவதற்காக வருடாவருடம் கலை பண்பாட்டு விழாவினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தி வருவதும் குறிப்பிடதக்கது.