உடையார்கட்டு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக இன்றையதினம் (20.03.2026) மூடப்பட்டமையால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற முதியவர்கள், பாடசாலை மாணவர்கள், கிளினிக்கிற்காக வந்த நோயாளர்கள் என பலரும் பெரிம் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேசவைத்தியசாலைக்கு நேற்றையதினம் மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து வைத்தியசாலை காவலாளியை குறித்த நபர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டு இன்றையதினம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதால் குறித்த கிராம நோயாளர்கள் மாதாந்த கிளினிக் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், சிகிச்சை பெற வந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

இது குறித்து வைத்தியசாலை முன்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், காய்ச்சல் காரணமாக வருகை தந்த வயோதிபர்கள், மாதாந்த கிளினிக்கிற்காக பலரும் வந்திருக்கிறார்கள் குளுசை அனைத்தும் முடிந்துவிட்டதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை. பின்தங்கிய கிராமமாக இருப்பதனால் இந்த வைத்தியசாலையை விட்டால் பல கிலோமீற்றர்கள் கடந்தே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை. ஒன்று இரண்டு நபர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். வைத்தியசாலை பாதுகாவலருக்கு தாக்கியதாக கூறுகிறார்கள் . அவ்வாறு நடந்திருந்தால் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளட்டும் நாங்களும் அதற்கு ஆதரவு தருகின்றோம். ஆனால் வைத்தியசாலையை பூட்டுவதனால் பல நோயாளர்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளார்கள் . வைத்தியசாலையை பூட்டுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சின்ன விடயத்திற்கெல்லாம் வைத்தியசாலையை பூட்டாமல் நோயாளர்களின் நலன் கருதி வைத்தியசாலை செயற்பாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலை முன்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் , பிரதேச சபையின் உறுப்பினர் சுதாகரன் வளர்மதி, கிராம மட்ட அமைப்புகள் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இவ் விடயம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது,

இவ் விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருடன், மேல்மட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இன்றையதினம் (20) வைத்தியசாலை செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு வைத்தியசிலையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நபரை கைது செய்தால் நாளையதினம் வைத்தியசாலை செயற்பாடுகள் இடம்பெறும் என்பதுடன் இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


