உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்தினை தொடர்ந்து இன்று மீண்டும் சரக்கு தொடருந்து மோதி 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஒடிசாவில் மற்றுமொரு சோகம்
இந்நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கிய அதே இடத்தில் இன்று மீண்டும் சரக்கு தொடருந்து மோதியதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் ரோடு தொடருந்து நிலையம் அருகே நடந்துள்ளது.
தொடருந்து பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வரும் ஒப்பந்தாரர் சார்பில் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றி வரும் நிலையில் கடும் மழை காரணமாக நீண்ட காலமாக ஓடாத நிலையில் என்ஜின் எதுவுமின்றி தண்டவாளத்தில் நின்ற சரக்கு தொடருந்து பெட்டிக்கு அடியில் மழைக்காக ஒதுங்கியுள்ளனர்.
இதன்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று தொடருந்து பெட்டிகள் நகர்ந்த நிலையில் தொழிலாளர்கள் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
சம்பவத்தில் பலியான 6 பேரின் உடல்களும் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக என்ஜின் எதுவும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்ட இந்த சரக்கு தொடருந்து பெட்டிகள் திடீரென்று இன்று நகர்ந்தமை தொடர்பில் டிஆர்எம் குர்தா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.