முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (04.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் சமூக கௌரவத்துக்கு உரியவர்கள். தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக விதையானோர் வரலாற்றுக்குரியவர்கள் மட்டுமல்ல அவர்களே எதிர்கால வரலாற்றினை உயிராகவும், உயிர்பாகவும் வைத்திருப்பவர்கள் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. வீரம் நிறைந்த வரலாற்றை வாழவைக்கும் பொறுப்பு எந்த நிலையில் வாழ்ந்தாலும் முன்னாள் போராளிகளுக்கும், அரசியல் கைதிகளுக்கு இருப்பது போல தமிழரின் தேசியத்தை நேசிக்கின்ற ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் உண்டு. இதற்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அவர்களை தமிழர்களின் அரசியலே தண்டிக்கும்.
இறுதி யுத்த காலம் வரை காலம் வரை போராட்ட இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டு அவர்களின் அரசியலையும் போரியலையும் நியாயமென கூறியவர்கள் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தனது உண்மையான அரசியல் முகத்தை வெளிக்காட்டி போராளிகளை ஜனநாயக துரோகிகள் என வெளிப்படையாகவே கூறும் அரசியல் வாதிகளையும் காண்கின்றோம். இது முன்னாள் போராளிகளையும், அரசியல் கைதிகளையும் அவமானப்படுத்தும் செயல் என்பதோடு இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதேபோன்று முன்னாள் போராளிகள் என தம்மை அடையாளப்படுத்தி கொண்ட ஒரு சிலர் தமது குறுகிய அரசியல் மற்றும் சுகபோகத்திற்காக பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டு தமிழரின் தேசியத்தை சிதைக்கும் செயற்பாட்டிலும் முனைப்போடு செயல்படுகின்றனர். இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு விலை போக வேண்டாம் என முன்னாள் போராளிகளையும் அரசியல் கைதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் யுத்தத்தை காரணம் காட்டி வெளிநாடு சென்ற ஒரு சிலர் பணத்தை பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் போரினால் ஏழைகள் ஆக்கப்பட்ட பெண்களை குறி வைத்து தமது இச்சைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளிவருவதை அங்கீகரிக்க முடியாது. பணம் வாங்கியவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்ல முடியாது தவிப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந் நிலையில் சிறையிலிருந்து வெளியில் வந்த அரசியல் கைதிகள் ஒவ்வொருவருக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பெரும் தொகையான பணத்தை அன்பளிப்பு செய்வதாகவும் கூறப்படுகின்றது. இதனை வரவேற்கின்றோம். இது அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறைக்குள் வாடி வெளியில் வந்திருக்கும் அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பெரும் உதவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இத்தகைய உதவிகள் பேரினவாதத்திற்கு சோரம் போகாதவர்களுக்கும் தேவை உடையவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம்.
ஆனால் அரசியல் கட்சி ஒன்றின் ஊடாக உதவி செய்வது அக் கட்சியை வளர்ப்பதற்காகவே அமையும் என்பது எமது கருத்து. இதனை செய்வதற்கு அவ் அமைப்பிற்கு உரிமை இருந்தாலும் செய்யப்படும் உதவி தமிழர்களின் தேசியத்தை சிதைக்காதே காக்கும் உண்மையான அரசியல் நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கும்;அவர்கள் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து இத்தகைய சிந்தனையில் இருப்பவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது நன்று.
அத்தோடு சிறையில் இருந்து வெளியில் வரும் அரசியல் கைதிகளுக்கும் பணம் அன்பளிப்பு செய்யும் அமைப்புக்கும் இடையில் இடைத்தரகராக செயல்படும் அமைப்போன்று அரசியல் நெறிதவறி விடுதலை பெற்ற அரசியல் கைதிகளை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுவும் அரசியல் கைதிகளை காட்டிக் கொடுக்கும் மற்றும் தமிழர்களின் அரசியலை அழிக்கும் செயலுமாகும்.
ஆயுதம் மௌனிக்கப்படும் வரை தமிழர்களின் போராட்டம் தெற்கு மைய பேரினவாத கட்டமைப்புக்கு மட்டும் எதிரானதாகவே இருந்தது. தற்போது போராட்டம் அவர்களுக்கு எதிராக மட்டுமல்ல மேற்குலக மற்றும் அயலக அரசியல் மற்றும் பொருளாதார நோக்கத்துடன் எம் அரசியலை அழிக்கத் துடிக்கும் வல்லரசுகளுக்கும் தாயகத்தில் முளைத்துள்ள புல்லுருவிகளுக்கும் எதிரானது. அன்று நடந்த இறுதி கட்டப் போரினை விட தற்போது எமது போராட்டம் பயங்கரமானது. எமக்கு எதிராகவே களத்தில் நிற்கும் எம்மவர்கள் உனக்கு எதிராகவே போராட வேண்டிய காலமிது. எமக்கு எதிரானவர்களை சரியாக அடையாளம் காணாதவிடத்து முள்ளிவாய்க்கால் இரண்டாம் கட்டமானதும் இறுதியானதுமான அழிவு பயங்கரமானதாக அமையும்.