சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை அருட்தந்தை மா.சத்திவேல்

சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (12.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பேச்சு வார்த்தை, நல்லிணக்க செயற்பாடுகள், தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள், காணாமலாக்கபட்டோர் விடயமாக நியமிக்கப்படும் ஆணை குழுக்கள்,அதன் அறிக்கைகள், சமூக புதை குழிகளின் அகழ்வு, ஆய்வு முறைகள் எவற்றிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க வழிமுறையை ஆரம்பிக்க இடைக்கால சபைக்கான பதவிகளுக்கு விண்ணப்பம் கோரியிருப்பது இன்னொரு ஏமாற்று கபட நாடகமாகும். சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தென் ஆப்பிரிக்காவிற்கு அமைச்சர்கள், அரச அதிகாரிகள் சுற்றுலா செல்வதும் தென்னாப்பிரிக்க பாணியில் நல்லிணக்க செயற்பாட்டு வடிவிலான ஆணை குழு என்பதெல்லாம் பொருளாதார வீழ்ச்சி நிலையில் சர்வதேசத்தை ஏமாற்றி வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொள்ளும் தந்திர முயற்சியே அன்றி தமிழர்களுக்கு நீதிகிட்ட போவதில்லை என்பது மட்டும் உண்மை.

சர்வதேச நாடுகள், ஐநா மனித உரிமை பேரவை முன்வைக்கும் பரிந்துரைகள், யோசனைகள், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அரசு ஆயத்தமில்லை. குறிப்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் 31/1 மற்றும் 51/1 தீர்மானங்களுக்கு உடன்பாடததோடு உள்ளக பொறி முறையில் நாட்டம் கொண்டுள்ளமை பாதிக்கப்பட்டவர்கள் தேடும் நீதியை காணாமலாக்கும் செயற்பாடு எனலாம்.

இதனை அண்மையில் மூன்று அமைப்புகள் சமூக புதைகுழிகள் தொடர்பாக வெளியிட்டு அறிக்கை தெளிவுபடுத்துகின்றது. நீதி கிட்டக் கூடாது எனும் நோக்கிலேயே இலங்கை அரசு இயங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை சர்வதேச நாடுகளும் ஐ.நா மனித உரிமை பேரவையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். அது தொடர்பில் விழிப்படைய வேண்டும். அரசு தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் செயற்பாடுகள் எதனையும் செய்வதற்கு ஆயத்தம் இல்லாததால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை இழுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

புத்தரின் தந்தத்திற்கு ( பல்லின்) பாரிய மாளிகை அமைத்து வருடம் தோறும் விழா எடுக்கும் ஆட்சியாளர்கள் காணாமலாக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்திற்கு புத்தர்கள் என்பதையும் சமூக புதைகுளிகளில் கண்டுபிடிக்கப்படும் எச்சங்கள் ஒவ்வொன்றும் அவரவர் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் புனிதமானவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சமூக புதைகுளிகளில் கண்டெடுக்கப்படும் எச்சங்களை வைத்து விழா எடுக்குமாறு எவரும் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும். சர்வதேச நியமங்கள், சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அகழ்வு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கண்டுபிடிக்கப்படும் எச்சங்கள் யாருடைய என சரியாக அடையாளம் கண்டு அவரவர் குடும்பத்திடம் கையளித்து தமது சமய நம்பிக்கை மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அடக்கம் செய்ய வழியேற்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றார்கள். அதுவே நீதி. அதுவே நல்லிணக்கத்திற்கான ஆரம்ப புள்ளி அதுவே புத்தரின் வழி என மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

Related news