குருந்தூர் மலை பொங்கல் விவகாரம்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல் வழிபாட்டிற்கு சென்ற தமிழர் தரப்பு மீது பௌத்த துறவிகளினாலும், பொலிஸாரினராலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முல்லைத்தீவு குருந்துார் மலையில் கடந்த 14 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்த மனுவை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

சைவ வழிபாட்டு உரிமை மறுப்பு

இவ்வாறு சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 14.07.2023 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 17.07.2023 அன்று சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் (20.07.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் AR673/18 என்ற குருந்தூர்மலை வழக்கு நகர்த்தல் பத்திரம் அணைத்து நீதிமன்ற விசாரணைக்காகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் ஆலய அடியவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் மன்றில் தோன்றியிருந்தனர்.

பொங்கல் வழிபாடுகள் தடை

அந்தவகையில் சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டமை தொடர்பிலான புகைப்படங்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய அடியவர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் விளங்கமளிப்பதற்காக நீதிமன்றில் தோன்றியிருந்த பொலிஸார், தாம் சமாதானப்படுத்தும் நோக்கிலே தான் தாம் பொங்கல் வழிபாட்டினைத் தடுத்ததாக கூறியிருந்தார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும், மேலதிக தகவல்களையும் தொல்லியல் திணைக்களத்திடமிருந்தும் பெறவேண்டியதொரு தேவையிருப்பதால், குறித்த நாளில் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்லியல் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Latest news

Related news