பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்து யுவதி மரணம் : யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்

பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு திரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றிரவு (28.07.2023) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27.07.2023) பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

திடீர் மரண விசாரணை

பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனை

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த சற்குணரத்தினம் கௌசி (வயது 26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் தந்தை ஆகியோர் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவமானது அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

Latest news

Related news