தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் முடக்கி தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற பாெங்கல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தின் பிரதியை பெற்று அதன்பிரகாரம் பொங்கல் நிகழ்வை மேற்கொள்ள தயராக ஆதி சிவன் ஐயனார் ஆலயத்திற்கு வந்திருந்தும் இங்கு ஒருசாராருக்கு ஒரு பானையில் மட்டும் பொங்க அனுமதிச்சும் வேறு பானைகள் வைப்பதனை தடுத்து குறிப்பாக எங்களுடைய பொங்கலையும் தடுத்து தான் பொங்கல் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தெளிவுபடுத்திய பின்னரும் அதாவது பொங்கல் எனில் வழமையாக ஒரு நேர்த்தியின் பிரகாரம் நடைபெறுகின்ற உற்சவம். அந்தவகையில் ஒருவருடைய நேர்த்தியுடன் மற்றவருடைய நேர்த்தியை தீர்க்க முடியாது. இவ்வாறு தடுப்பது தவறானது.
நீதிமன்றத்தில் ஒரு பானையில் மட்டும் பொங்க வேண்டும் என்ற உத்தரவு எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக பொங்கல் நிகழ்வை குறித்த விழாவை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதனை யாரும் தடுக்க முடியாததாகவும் அவ் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்திடம் நாங்கள் கேட்டுக்கொண்டது ஏனையவர்களும் பொங்கலை மேற்கொள்ளுவதற்குரிய வகையிலே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வழங்கினால் அல்லது நாங்கள் பொங்குவதற்குரிய தடைகள் ஏதும் இருப்பின் எந்தவகையில் பொங்க வேண்டும், எதனை செய்ய முடியாது என்ற விடயத்தை குறிப்பிட்டால் ஏனையவர்களுக்கு செய்தது போல் அதன் பிரகாரம் நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என கூறியும் அதனை அவர்கள் மறுத்திருக்கின்றார்கள்.
பொங்கல் விழா சைவ பாரம்பரிய முறையில் எடுத்து பார்த்தால் ஆயிரக்கணக்கில் பானைகள் வைத்து அந்த நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும். ஆனால் இங்கே வெறுமனே ஒரேயொரு பானையில் மட்டும் தான் .ஒரேயொரு இடத்தில் மட்டும் தான் பொங்கலாம் என்று தொல்பொருள் திணைக்களம் இந்த விழாவை மட்டுப்படுத்தி வைத்திருப்பது மக்களை இந்த இடத்திலே நடமாடுவதனை திட்டமிட்டு இல்லாமல் செய்து இங்கே நேர்த்தியை செய்வதற்குரிய இடமாக இதனை முற்றுமுழுதாக நிறுத்தி தங்களுடைய தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் இதனை முடக்கி இறுதியில் தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
எங்களுடைய ஆதங்கங்களை சட்ட நிபுணர்களூடாக அணுகி நீதிமன்றத்தின் ஊடாக ஏனையவர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கின்ற முறையிலே எங்களுடைய நியாயங்களையும் எடுத்து கூறி மக்களுக்கு இடைஞ்சல்கள் இல்லாது பொங்கல் நிகழ்வை நடாத்துவதற்கு தொல்பொருளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடாத்துவதற்குரிய வகையிலே எங்களால் முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.