எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்களா ? சமூக செயற்பாட்டாளர் சு.சிவமணி கேள்வி

புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் ? என சமூக செயற்பாட்டாளர் சுந்தரம்பிள்ளை சிவமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொக்கு தொடுவாய் பகுதியிலே பிறந்து தற்போது வரை வசித்து வருகின்றேன். நாம் இடம் பெயர்ந்தாே அல்லது புதைகுழியில் புதைக்கப்பட்டதோ முக்கியமான விடயம் அல்ல, புதைகுழியில் புதைக்கப்பட்ட எமது காணாமல் போன பிள்ளைகள் தான் எமக்கு முக்கியம்.

புதைகுழியில் காணப்பட்ட பிள்ளைகள் அனைத்தும் கை கால்கள் சப்பாத்து நூல்களாலும், வெலுட்டினாலும் கட்டப்பட்ட நிலையிலையே இருந்ததனை அகழ்வுப்பணியிலே காணமுடிந்தது. பிள்ளைகளை கை, கால் கட்டி புதைக்க வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால் இங்கு புதைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் அறைகூவி அழைக்கபட்ட பிள்ளைகள் அதாவது ஒரு நாளாவது நீங்கள் காவலரண்களில் நின்றால் அல்லது விடுதலை புலிகளுக்கு ஒரு நேர உணவு அளித்திருந்தால் கூட வாருங்கள் உங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவோம் என அழைக்கப்பட்டவர்கள் தான் இவர்கள் இதில் இளைஞர்களும் இளம் மங்கையர்களும் தான் அதிகம்.

குறிப்பாக இன்னும் கொஞ்ச பிள்ளைகள் வெள்ளை கொடி பிடித்து சரணடைந்தவர்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை வைத்து பொதுமன்னிப்பு வழங்கப்படும் என கூறி அழைத்ததனை நாம் எம் கண்ணாலே கண்டிருக்கின்றோம். 13 வருடமாக கையளித்த எம் பிள்ளைகள் எங்கே என கேட்கின்றோம், பதில் இல்லை. காரணம் என்ன? ஊர் ஊராக சந்தி சந்தியாக இராணுவத்திடம் பிள்ளைகளை கையளித்த பெற்றோர் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

பதில் இன்றுவரை இல்லை.எங்கே எம் பிள்ளைகள்? எம் கால் மண்ணிலையே எம் பிள்ளைகளை புதைத்திருக்கிறார்கள் சிங்கள மக்களை குடியேற்ற நீங்களே தண்ணீர் வசதி செய்து நீங்களே எம் பிள்ளைகள் புதைத்த இடத்தை காட்டி கொடுத்து விட்டீர்கள்.

நீங்கள் எம் பிள்ளைகளை வஞ்சித்து எவ்வளவு வன் கொடுமைகள் செய்தீர்களோ அவ்வளவும் வெளிவரும். புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்புகூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் ? எல்லாவற்றையும் வெளியிலெடுத்து எம் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரின் கேள்விக்கு விடை தாருங்கள்.

மன்னாரில் ஒரு வருடம் இரண்டு வருடம் என கடத்தி செல்வது போல இங்கு கடத்த வேண்டாம் எமக்கு மூன்று மாதத்திற்குள் உடனே பதில்வேண்டும். மூன்று மாதத்திற்குள் அகழ்வு பணியினை முடித்து எமக்கு பதில் வழங்க வேண்டும். எமது கிராமத்திற்குள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றது. நாம் இருக்கும் இடத்தால் பிள்ளைகளை புதைத்துவிட்டு அதற்குமேல் நாம் இருந்தால் என்ன நடக்கும் இது நாட்டுக்கு சாபக்கேடு, உடனடியாக இவ் சடலங்கள் அகற்றப்பட்டு எமது கிராமத்திற்கு சாந்தி செய்ய வேண்டும்.

புதைக்கப்பட்ட இடம் பெரிய இராணுவ முகாம் மண்மேடுகளால் உயர்த்தப்பட்ட இடம் அந்த இடத்திற்கு யாரையும் வரவிடாதபடி பின்வீதியாலே பயணம் செய்து வந்தது. அப்படியான இடத்தில் யார் எங்கட பிள்ளையள கொண்டுவந்து புதைத்தது இராணுவம் தான் இதற்கு சர்வதேசம் தான் இதில் தலையிட்டு காணாமல் போன எம் பிள்ளைகளுக்கு நீதியினை பெற்றுதர வேண்டும் .

குறித்த இடத்திற்கு நாம் செல்லகூடாது என்று கூறுகின்றார்கள் சம்பந்தப்பட்டவர்கள் தான் போக வேண்டும் என கூறுகின்றார்கள். யாரோ முகம் தெரியாத இதை பற்றி அறியாதவன் எல்லாம் வாறான் ஆனால் எங்கட பிள்ளையள தானே அங்கே புதைத்திருக்கிறார்கள் அதற்கு நாம் ஏன்போகக்கூடாது. யார் எமக்கு அந்த உரிமை இல்லை என கூறியது. எம் பிள்ளைகளை இங்கே புதைத்தவர்கள் தான் இதையும் கூறுகிறார்கள் இந்நிலமை இனியும் தொடரக்கூடாது. இதை நான் சர்வதேசத்திற்கும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் எம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும், தமிழினத்திற்கும் கூறுகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news